கோனியம்மன் கோவில் தேரோட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விட வேண்டும்

0
49

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. புதிதாக பொறுப்பேற்று கொண்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில், இந்து மக்கள் கட்சி தமிழகத்தினர் அளித்த மனுவில், கோனியம்மன் கோவிலில் மாசி தேர்த்திருவிழா அடுத்த மாதம்(மார்ச்) 1-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய பக்தர்கள் வசதிக்காக பள்ளி, கல்லூரிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் பழுதடைந்த நிலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும். இது தவிர கோவையில் நிலுவையில் உள்ள மேம்பால பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சாலையில் ஆக்கிரமிப்புகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கொடுத்த மனுவில், கணபதிபுதூர் செக்கான் தோட்டம் பாலன் நகரில் ெரயில்வே பாலம் உள்ளது. ஆனால் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இல்லையென்றால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்க வேண்டி இருக்கிறது. எனவே ரெயில்வே பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

வேலுச்சாமி என்பவர் கொடுத்த மனுவில், கோவை-பாலக்காடு சாலையில் குனியமுத்தூர் முதல் குளத்துப்பாளையம் பிரிவு வரை இருபுறமும் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் சாலை குறுகலாகிவிட்டது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு சாலையை விரிவாக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சம்பளம் வழங்கவில்லை

கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையினர் குழந்தைகளுடன் வந்து கொடுத்த மனுவில், கீரணத்தம் குடிசை மாற்று வாரியத்தில் காளிமுத்து என்பவர் பகல் நேரத்தில் பராமரிப்பாளராகவும், இரவில் காவலாளியாகவும் பணிபுரிந்து வருகிறார். ஆனால் கடந்த ஒரு ஆண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் மேஸ்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.