கோவை அருகே கணவனும், மனைவியும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தம்பதி தற்கொலை முயற்சி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது57). இவரது மனைவி பிரியா (45). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். காளிமுத்து கோவை கோவில்பாளையம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காளிமுத்துவும், பிரியாவும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்து கிடந்தனர். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கே அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இது குறித்த தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காளிமுத்துவை கடந்த 23-ந் தேதி வேலையை விட்டு நீக்கி உள்ளனர். அத்துடன் அவர் குடியிருந்த வீட்டையும் காலி செய்ய கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த காளிமுத்து மனைவியுடன் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரிய வந்தது. இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.