கோவை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி செய்த செயலாளர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ரூ.2.11 கோடி மோசடி
கோவை வரதராஜபுரத்தில் என்.ஜி.ஆர். தொழிலாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோதண்டராமன் என்பவர் செயலாளராக இருந்தார். தலைவராக ராஜேந்திரன் என்பவர் இருந்தார்.
இந்தநிலையில் கோதண்டராமன், ராஜேந்திரன் ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் பெயாில் போலியாக அடமான கடன் பெற்றும், உறுப்பினர்களின் நிரந்தர வைப்புத்தொகையில் இருந்து அவர்களுக்கு தெரியாமலேயே கடன் தொகை பெற்றும் ரூ.2 கோடியே 11 லட்சம் மோசடி செய்தது அதிகாரிகளின் தணிக்கையில் தெரியவந்தது. இதுகுறித்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அர்த்தநாரீஸ்வரன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
செயலாளர் கைது
புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கோதண்டராமனை நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.
மோசடியில் ஈடுபட்டதால் கூட்டுறவு சங்க செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ராஜேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தது குறிப்பிடத்தக்கது.