மந்திரகிரி வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

0
58

தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தைப்பூச திருவிழா தொடக்கம்

சுல்தான்பேட்டை அருகே தென்சேரிமலையில் பிரசித்தி பெற்ற மந்திரகிரி வேலாயுசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து மந்திரகிரி வேலாயுதசாமிக்கு காப்பு பெற்று, உற்சவர் முத்துக்குமாரசாமி கொடிமரம் முன்பு எழுந்தருளி கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வருகிற 5-ந்தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணிக்குள் மகா அபிஷேகம், மகா தீபாராதனை, யானை வாகனத்தில் திருவீதி உலா உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

தேர் வடம் பிடித்து இழுத்தல்

மாலை 3 மணிக்கு விநாயகர், மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் திருத்தேர் வடம் பிடித்து நிலை நிறுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந்தேதி காலை 7 மணிக்கு அபிஷேகாதி கிரிவலம், மாலை 6 மணிக்கு எந்திர விமான பல்லக்கில் சாமி கிரிவலம் வருதல், 7-ந்தேதி சாமி கிரிவலம், இரவு 10 மணிக்கு பாரிவேட்டை, தரிசன மகோற்சவத்தில் திருவீதி உலா உள்பட சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

10-ம் திருவிழாவான 8-ந்தேதி காலை 7 மணிக்கு மகா அபிஷேகம், காலை 10 மணிக்கு மந்திரகிரி வேலாயுதசாமிக்கு மந்திர உபதேசக்காட்சி, சுந்தர ராஜபெருமாளுக்கு அருளிய காட்சி, மகா தீபாராதனை நடக்கிறது. பகல் 11 மணிக்கு சிவகாசுந்தரி சமதே ஆனந்த நடராஜ பெருமாள், முத்துக்குமாரசாமி, சுந்தரராஜபெருமாள், அரசமர விநாயகரை பட்டி சுற்றி பக்தர்களுக்கு தரிசன காட்சி அளித்தல், இரவு 10 மணிக்கு மஞ்சள் நீர் உத்சவம், சாமி திருமலைக்கு எழுந்தருளுதல், கொடி இறக்குதல், ஆசார்ய உத்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.