டாஸ்மாக் கடை அமைக்க கூடாது

0
55

சோமனூரில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று குறை தீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. மனு கொடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பரிசோதனை செய்தனர்.

மேலும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கேன்களை சோதனை செய்து, கைகளில் ஊற்றி பார்த்தனர். இதையடுத்து அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்தனர். பொதுமக் களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரன் பெற்றுக் கொண்டார்.

வாயில் கருப்புத்துணி

அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையை சேர்ந்தவர்கள் வாயில் கருப்புத்துணி கட்டியபடி வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், கோவை தடாகம் ரோடு வேலாண்டிபாளையம், வெங்கடாபுரம், சிவாஜி காலனி, பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வாடகை வீட்டிலும், புறம்போக்கு இடத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று அலுவலகத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் அவர்க ளுக்கு இதுவரை வீடு ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த சிலருக்கு 2 ஆண்டுக ளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை இடத்தை அளந்து தர வில்லை. சிலருக்கு பட்டா வழங்கவில்லை. எனவே விரைவில் பட்டா வழங்குவதோடு, இடத்தையும் அளந்து தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கல் குவாரிக்கு எதிர்ப்பு

காரமடை சுற்றுவட்டார கிராம மக்கள் அளித்த மனுவில், கல்குவாரி அமைக்க அனுமதி கோரியுள்ள இடத்தை சுற்றி மங்கல கரைப்புதூர், எத்தப்பன் நகர், அம்பேத்கர் நகர், கோடதாசனூர், ராம் நகர், சத்தியா நகர், ரங்கா கார்டன் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

இங்கு கல்குவாரி அமைத்தால் பாறையை தகர்க்க வெடி வைக்கும் போது குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் சுற்றுப்புறச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே அங்கு குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் கடை வேண்டாம்

சோமனூர் பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அளித்த மனுவில், சோமனூரில் சந்தை, பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள், மருத்துவ மனை நிறைந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைத்தால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும்.

எனவே டாஸ்மாக் கடையை அமைக்க அரசு அனுமதி அளிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மராட்டியத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சாதிக்உசேன், 3 சக்கர வாகனம் வேண்டி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.