விமான நிலையத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஊழியர்கள்

0
58

கோவை விமான நிலையத்தில் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு விமான நிலைய ஊழியர்கள் உதவி வருகிறார்கள். இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை விமான நிலையம்

கோவை விமான நிலையத்தில் தினமும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் விமான நிலையத்துக்கு தினமும் வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு திட்டம்

இதுகுறித்து கோவை சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். விமான பயணிகளை கவனிக்கும் முறை குறித்து சமீபத்தில் மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் விமான பயணம் மேற்கொள்ளும் தாய்மார்களின் நலன் கருதி அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் தற்போது இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

வரவேற்பு

இதன்படி விமான நிலைய ஊழியர்கள் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் விமான பயணிகளை வரவேற்று அவர்களின் தேவையை கேட்டறிந்து அதற்கேற்ப தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்

குறிப்பாக முதியவர்களின் உடைமைகளை எடுத்து செல்லுதல், முதியவர்களை கைதாங்கலாக அன்புடன் அழைத்து செல்லுதல் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் சிரமமின்றி விமான நிலைய வளாகத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட ஒரு சில நாட்களிலேயே பயணிகள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்வரும் நாட்களிலும் மேலும் சிறப்பாக இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.