குறைதீர்க்கும் கூட்டம்
கோவை மாவட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம் வருமாறு:-
புதிய பட்டியல்
காளிசாமி: மதுக்கரை தாலுகா குமிட்டிபதி, பாலத்துறை மற்றும் அங்குள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பட்டா கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதில், நன்செய், புன்செய் என்று இருக்கும் இடத்தில் நில பரப்பளவு குறிப்பிட்டு இருக்கும். ஆனால் அது தவறுதலாக மற்றவை என்ற காலத்தில் குறிப்பிட்டு உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும்.
பி.ஆர்.பழனிசாமி (விவசாயிகள் சங்கம்) : கோவை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் உறுப்பினர் பட்டியலில் உயிரிழந்தவர்கள் மற்றும் வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்களின் பெயர் உள்ளது. எனவே அதை ஆய்வு செய்து புதிதாக உறுப்பினர் பட்டியலை வெளியிட வேண்டும்.
காட்டு யானைகள்
சு.பழனிசாமி (தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு) :- கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி வனச்சரக பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அதிகளவில் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைகிறார்கள். எனவே காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். காரமடை, சோமனூர், அன்னூர் பகுதிகளில் வாரச்சந்தைகள் இரவு நேரத்தில் மட்டுமே நடந்து வருகிறது. அதை மாற்றி சந்தைகளை மாலை நேரத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும்.
நொய்யல் ஆற்றில் கழிவுகள்
தீத்திபாளையம் பெரியசாமி (விவசாயிகள் சங்கம்) :- கோவையின் ஜீவநதியாக இருந்த நொய்யல் ஆற்றில் தற்போது மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் செல்கிறது. மேலும் ஆற்றின் வழியோர பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் கழிவுநீரை ஆற்றில் கலப்பதால் ஆறு மாசடைந்து உள்ளது. அதோடு நொய்யல் கழிவுநீர் ஓடும் சாக்கடையாக மாறிவிட்டது. அந்த தண்ணீர் பயிர்களுக்கு செல்வதால் பயிர்களும நச்சுத்தன்மையாக மாறுகிறது. எனவே நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பெரும்பாலான விவசாயிகள் பேசினார்கள். இது தொடர்பாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். கூட்டத் தில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.