மக்களின் பிரச்சினைகளை எப்படி தீர்க்க முடியும்

0
57

அதிகாரிகள் பங்கேற்காவிட்டால் பொதுமக்களின் பிரச்சினைகளை எப்படி தீர்க்க முடியும் என்று ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

ஒன்றிய குழு கூட்டம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் நேற்று கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் விஜயராணி ரங்கசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆணையாளர் முத்துமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) ஆனந்த் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக ஒன்றிய கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:-

பல்லடம் ரோட்டில் கள்ளிப்பாளையம் பிரிவில் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதை அகற்ற கூட்டத்தில் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மேலும் கொல்லப்பட்டியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பி வெளியேறுகிறது.

அதிகாரிகள் வரவில்லை

சுதந்திர தின தியாகிகள் கல்வெட்டு அருகில் உள்ள பள்ளி கட்டிடத்தின் வளாகம் பழுதடைந்து காணப்படுவதால், அகற்றி விட்டு சுதந்திர தின பூங்கா அமைக்க வேண்டும். மேலும் கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்பட எந்த துறை அதிகாரிகளும் கலந்துகொள்வதில்லை. இதனால் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், பல்லடம் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தை இடித்து அகற்ற கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. அடுத்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தபால் அனுப்பி கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.