ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநில மக்கள் அங்கிருந்து வெளியேறினர். இதற்கிடையே தாக்குதலை நடத்தியவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கையை தொடங்கியது. குஜராத் மாநில அரசுக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவன் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. அவனை கைது செய்தது பீகார் மாநிலம் சராண் மாவட்டத்தில் வசிக்கும் அவனுடைய பெற்றோர்களுக்கு தெரியாது. இப்போது தெரியவந்ததும் அவனுடைய தாயார் ராமாதேவி தேவி செய்தியாளர்களிடம் பேசுகையில், “2 வருடங்களுக்கு முன்னதாக இங்கிருந்து மாயமானான். அவன் சொல் பேச்சை கேட்கமாட்டான். அவனுடைய நண்பர்களுடன் குஜராத் சென்றுள்ளான், இது சில மாதங்களுக்கு முன்னர்தான் எங்களுக்கு தெரியவந்தது.
என்னுடைய மகன் குற்றம் செய்தவன் என்பது உறுதியானால் அவனை தூக்கிலிடுங்கள் மாறாக அப்பாவி மக்களை தாக்காதீர்கள், பீகார் மாநில மக்களை வெளியேற்றாதீர்கள்,” என்று கூறியுள்ளார்.