பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் வனவிலங்குகள்:பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை -சோதனைச்சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

0
73

ஆழியாறு வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

முறையான சோதனை இல்லை

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உட்பட்ட வால்பாறை, டாப்சிலிப் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. அங்கு செல்லும் வழியில் ஆழியார் அணை, சிறுவர் பூங்கா, அறிவு திருக்கோவில், குரங்கு நீர்வீழ்ச்சி, அட்டகட்டி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் உள்ளது. இங்கு வெளியூர்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் கடந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து உள்ளனர். இந்நிலையில் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் ஆழியார் சோதனை சாவடி உள்ளது.

இங்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வனத்துறை ஊழியர்கள் சோதனை செய்து பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் கவர், மதுபானங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்வது வழக்கம்.ஆனால் கடந்த சில நாட்களாக வனத்துறை ஊழியர்கள் வாகனங்களில் முறையாக பரிசோதனை செய்வதில்லை.

உயிரிழக்க வாய்ப்பு

இதன் விளைவாக வனத்தில் உயிர்வாழும் யானை, வரையாடு, மான், கடமான், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உணவாக உட்கொள்கின்றன. இதனால் வயிற்றில் செரிமான கோளாறு ஏற்பட்டு, உடல் உபாதைகளில் நோய் வாய்படுகின்றன.

ஒருசில நேரங்களில் வனவிலங்குகள் உயிரிழக்கின்றன. மேலும் வன சாலையில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர். எனவே இதனை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உட்பட்ட ஆழியார் சோதனைச் சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் இடத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தின்பண்டங்களை விலங்குகளுக்கு கொடுக்கக் கூடாது எனவும் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசக்கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். மேலும் வாகனங்களில் முழுமையாக பரிசோதனை செய்த பிறகு அனுப்ப வேண்டும். சிலர் மது பாட்டில்களை வனப் பகுதிகளுக்குள் எடுத்துச் சென்று மது அருந்திவிட்டு உடைத்து வீசுகின்றனர். இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சோதனைச்சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வனத்துறையினர் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.