புதுடெல்லி,
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பு பணிகளில் எந்த தொய்வும் ஏற்படாது, மருத்துவமனை கட்ட ரூ.1,264 கோடி செலவினத்துக்கான நிதி ஒப்புதல் டிசம்பர் மாதத்துக்குள் கிடைத்து விடும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டாவை அமைச்சர் விஜயபாஸ்கர் தனியாக சந்தித்து, தமிழகம் தொடர்பான சில கோரிக்கைகளை வலியுறுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநாட்டில் தமிழக அரசு மருத்துவ பணிகளில் சிறந்து விளங்கி வருவதாக மத்திய மந்திரி நட்டா பாராட்டினார். இந்தியாவிலேயே மருத்துவச் செலவு மிகவும் குறைந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக நாம் கடந்த 2016-ம் ஆண்டு விருதும் பெற்று இருக்கிறோம்.
மாநாட்டை தொடர்ந்து மத்திய மந்திரி நட்டாவை சந்தித்து பேசினோம். அப்போது பிரதமரிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்திய கோரிக்கைகள் உள்ளிட்ட வேறு சில கோரிக்கைகளையும் முன்வைத்தோம்.
முதலாவதாக, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை வேகப்படுத்தி அதற்கான நிதி ஒப்புதலை விரைவாக பெற்றுத்தர வலியுறுத்தினேன். நிதி ஒப்புதலை டிசம்பர் மாதத்துக்குள் பெற்றுத்தந்து பணிகளை விரைவுபடுத்துவதாக மத்திய மந்திரி நட்டா எங்களிடம் கூறினார்.
அடுத்ததாக, மத்திய அரசு நிதி உதவியுடன் தஞ்சை, மதுரை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் தலா ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பன்முக மருத்துவமனையை மக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறு கேட்டோம். உடனே மத்திய மந்திரி நட்டா, உயர் அதிகாரிகளை அழைத்து பேசி அதற்காக உத்தரவிட்டார்.
தொடர்ந்து, செங்கல்பட்டில் மத்திய அரசு நிதி உதவியுடன் ரூ.600 கோடியில் கட்டப்பட்டுள்ள தடுப்பூசி தயாரிக்கும் வளாகத்தையும் பொதுமக்களின் செயலாக்கத்துக்கு கொண்டு வர கேட்டோம். இது தொடர்பாக பிரதமருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
அடுத்து, விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று கேட்டோம். அதற்கு அவர் இசைவு தெரிவித்தார். மேலும் ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக்கல்லூரி கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறினார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மக்கள் நல்வாழ்வுத்துறை இடத்தைத்தான் வழங்கி இருக்கிறோம். எனவே, இட சிக்கல் இல்லை. மண் பரிசோதனையும் முடிந்து விட்டது. அடுத்து ரூ.1,264 கோடி நிதிக்கான ஒப்புதலைத்தான் பெற வேண்டும். டிசம்பர் மாதத்துக்குள் அது கிடைத்துவிடும் என்று நம்பிக்கை இருக்கிறது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த தொய்வும் ஏற்படாது.
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதே அரசின் கொள்கை. அதில் எந்த வகையிலும் பின்வாங்கவில்லை. நீட்தேர்வு தொடர்பான கேள்வியோ, பதிலோ மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடக்கூடாது என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.