பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல்
கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த வாரம் சென்னை சென்று வந்துள்ளார். இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததை தொடர்ந்து எஸ்டேட் தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் துப்புரவு அதிகாரி செல்வராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் அடங்கிய குழுவினர் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணி மேற்கொண்டு அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் கிருமிநாசினிகள் தெளித்து எஸ்டேட் பகுதியில் தூய்மை பணி மேற்கொண்டனர்.
நடமாடும் மருத்துவ குழுவினர்
மேலும் சோலையாறு அணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடமாடும் மருத்துவ குழுவினர் இல்லம் தேடி மருத்துவ பணியாளர்கள் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து உரிய பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வெளியூர்களுக்கு சென்று வருபவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளனர்.