அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

0
71

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பேரூராட்சிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரூராட்சிகளில் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பால் விலை உயர்வு, தேங்காய், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி, தென்னைநார் தொழில் பாதிப்பு மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், கோட்டூர், ஒடையகுளம் ஆகிய பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தேங்காய் விலை உயர்ந்து இருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. தென்னை நார் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. பேரூராட்சிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யவில்லை. இதனால் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பேரூராட்சிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் அட்டை தாரர்க ளுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்க வேண்டும்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு, தேயிலை தோட்ட பிரிவு மாநில தலைவர் வால்பாறை அமீது, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக் அப்புசாமி, ஜி.கே.சுந்தரம், வால்பாறை நகர செயலாளர் மயில்கணேசன், மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், நிர்வாகிகள் ரகுபதி, விஜயகுமார், ஓ.கே.முருகன், குருசாமி, ராஜேந்திரன், கோட்டூர் பாலு, சந்திரகுமார், விமல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.