மகனுக்கு கனடாவில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி முதியவரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கனடாவில் வேலை
கோவை விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகரை சேர்ந்தவர் ஹரிகுமார் துரைசாமி (வயது 64). இவர் தனது மகனுக்கு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த நவாஸ் அகமது என்பவர் ஹரிகுமார் துரைசாமிக்கு அறிமுகம் ஆனார். அவர், கனடாவில் நல்ல வேலை இருக்கிறது, நான் உங்கள் மகனுக்கு வேலை வாங்கி கொடுக்கிறேன், ஆனால் அதற்கு பணம் செலவாகும் என்று கூறி உள்ளார். அதற்கு ஹரிகுமார் துரைசாமி, நல்ல வேலை என்றால் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று கூறியதாக தெரிகிறது.
ரூ.7½ லட்சம்
இதையடுத்து அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் வரை பல்வேறு தவணைகளாக ரூ.7 லட்சத்து 56 ஆயிரத்து 200 கொடுத்து உள்ளார். மேலும் வேலை குறித்து கேட்கும்போதெல்லாம் விரைவில் வந்துவிடும் என்று நவாஸ் அகமது கூறி வந்ததாக தெரிகிறது.
ஆனால் அவர் வேைல வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர், பலமுறை நவாஸ் அகமதுவிடம் பணத்தை கேட்டதற்கு கொடுக்காமல் இழுத்தடித்து வந்து உள்ளார்.
இது குறித்து ஹரிகுமார் துரைசாமி, பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கனடாவில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி செய்த நவாஸ் அகமது மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.