கோவையில் தொழில்அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்போன்களை மர்ம நபர் ‘ஹேக்’ செய்ததுடன், அவர்களது புகைப்படங் களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டினார். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘ஹேக்’ செய்யப்பட்ட செல்போன்கள்
கோவையை சேர்ந்த 52 வயது தொழில் அதிபர் ஒருவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எனது வீட்டில் தனியார் நிறுவனத்தின் வைபை இணையதள இணைப்பு உள்ளது. இதன் மூலம் நான், எனது மனைவி, மகன், மகள் உள்ளிட்டோர் இணையதளம் பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் எனது மகனின் செல்போன் திடீரென்று தானாக சுவிட் ஆப் ஆனது. அதன்பின்னர் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த போது எனது மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.24 ஆயிரத்து 500 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் எனது செல்போன், எனது மனைவி, மகள் உள்ளிட்டோரின் செல்போனை யாரோ ஹேக் செய்து முடக்கினர். பின்னர் எங்களது 4 பேரின் செல்போன் எண்களை பயன்படுத்தி வாட்ஸ் அப் ஆபாச குழுக்களில் சேர்த்தனர். இதனால் எங்களது செல்போன்களுக்கு ஏராளமான ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வந்தன.
மிரட்டல்
மேலும் எங்களது செல்போனை ஹேக் செய்த அந்த நபர் நாங்கள் அனுப்புவது போன்று எங்களது உறவினர்களுக்கு வாட்ஸ் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி எங்களுக்கு அவமானம் ஏற்படுத்தினர். இதனால் அச்சம் அடைந்த நாங்கள் வைபை இணையதள சேவையை ரத்து செய்து விட்டு, வேறு செல்போன் எண்களை பயன்படுத்தினோம்.
இருப்பினும் அந்த மர்ம நபர் எங்களது செல்போன்களை மீண்டும் ஹேக் செய்து ஆபாச குழுக்களில் சேர்த்தனர். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. மேலும் எனது குடும்பத்தினரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்ததுடன், அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டினார். அதேபோல் எனது செல்போன் எண்ணிற்கு கியூஆர் கோடு ஒன்றை அனுப்பி அதில் பணம் செலுத்த வற்புறுத்துகிறார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.