கோவைக்கு சிறுமியை கடத்தி வந்து குடும்பம் நடத்திய வாலிபர்-போலீசில் சிக்கினார்

0
126

ஒடிசாவில் இருந்து கோவைக்கு சிறுமியை கடத்தி வந்து குடும்பம் நடத்திய வாலிபர் போலீசில் சிக்கினார்.

காதலுக்கு எதிர்ப்பு

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 21 வயது வாலிபருக்கு, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமி தனது காதலனிடம் கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து வாலிபர் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஒடிசாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்தார். பின்னர் கே.ஜி.சாவடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் தங்கி அங்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி மீட்பு

சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் ஒடிசாவில் உள்ள சதார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது சிறுமி கோவையில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஒடிசா மாநிலம் சதார் போலீசார் நேற்று கோவைக்கு வந்தனர். அவர்கள் கே.ஜி.சாவடி போலீசாரின் உதவியுடன் எட்டிமடையில் வாலிபருடன் தங்கி இருந்த சிறுமியை மீட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் ஒடிசாவுக்கு அழைத்து சென்றனர்.

வாலிபர் சிறுமியை கடத்தி வந்து 7 மாதமாக அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். எனவே வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒடிசா போலீசார் தெரிவித்தனர்.