குவாரியில் கல் உடைப்பதற்கான உரிமத்தை ரத்த செய்ய கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பு கொடி
பொள்ளாச்சி அருகே உள்ள சோலபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.சந்திராபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கல் குவாரியால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், குவாரியில் கல் உடைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய கோரியும் பொதுமக்கள் நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடுகள், சாலையோரங்களில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வந்து சப்-கலெக்டர் பிரியங்காவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எஸ்.சந்திராபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் குவாரியில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் வெடி வைத்து வருகிறார்கள். இதனால் குவாரியை சுற்றி 300 மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலம் ஏற்பட்டு கற்கள் பரவலாக விழுகின்றன. குடியிருப்புகள் மீது கற்கள் விழுவதால் ஓடுகள் சேதமாகிறது. அதிகாலை முதல் கற்களை உடைப்பதால் ஏற்படும் சத்தத்தால் குழந்தைகள், முதியவர்கள் உள்பட பொதுமக்கள் தூங்க முடியவில்லை.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
கனரக வாகனங்களில் அளவிற்கு அதிகமாக பாரம் கொண்ட கற்களை ஏற்றி செல்வதால் கிராம வழிச்சாலை பழுதடைகிறது. பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்படும் வெடிகளினால் வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இதனால் விரிசல் ஏற்பட்டு வீடுகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சார்பில் கலெக்டர், சப்-கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குவாரியில் கல் உடைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.