சப்-கலெக்டர் அலுவலகத்தை மண்பாண்ட தொழிலாளர்கள் முற்றுகை

0
58

கோதவாடி குளத்தில் இருந்து மண் எடுக்க அனுமதி கேட்டு பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை மண்பாண்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் முற்றுகை

கோவை தெற்கு மாவட்டத்திற்கு உள்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் 150 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்பாண்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர். ஆனால் மண் கிடைக்காததால் கார்த்திகை தீபத்திருவிழாைவயொட்டி விளக்கு தயாரிக்க முடியவில்லை.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கோதவாடி குளத்தில் இருந்து மண் எடுக்க அனுமதி கொடுக்க கோரி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை மண்பாண்ட தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். இதற்கு மாநில தலைவர் செல்வராஜ், துணை தலைவர் காளிதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அப்போது மண்பானை, உருவார பொம்மைகள், அடுப்பு உள்ளிட்ட பொருட்களை போராட்டத்திற்கு வந்த பெண்கள் கையில் வைத்திருந்தனர்.

கோதவாடி குளம்

இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு சப்-கலெக்டர் பிரியங்காவிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

கோதவாடி குளத்தில் வழக்கமாக மண் எடுத்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக குளத்தில் மண் எடுக்க முடியவில்லை. அரசு அதிகாரிகள் 21 யூனிட் தான் மண் கொடுக்க முடியும் என்கின்றனர். ஒரு குடும்பத்திற்கு 5 யூனிட் மண் தேவைப்படுகிறது. 150 குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலை செய்து வருகிறோம். மண் கிடைக்காததால் இதை நம்பியுள்ள 2 ஆயிரம் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. கூடிய விரைவில் மண் எடுக்க மனு அனுமதி கொடுக்க வேண்டும். தரமில்லாத மண்ணை வைத்து பொருட்கள் செய்வதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.

ஒரு வாரத்துக்குள்…

விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு மண் கிடைக்கவில்லை. தற்போது தை மாதம் பொங்கலுக்கு தேவைப்படும் மண்பானை, உருவார பொம்மைகள், அடுப்பு, கஞ்சி கலயங்கள், பூவோடு மற்றும் உள்ளூர் திருவிழாக்களுக்கு தேவைப்படும் மண்பாண்ட பொருட்கள் செய்வதற்கு களிமண் இல்லை. எனவே கோதவாடி குளத்தில் களிமண் எடுக்க போர்க்கால அடிப்படையில் அனுமதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர், ஒரு வார காலத்திற்குள் மண் எடுக்க அனுமதி கொடுப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார். ஒரு வாரத்திற்குள் மண் கிடைத்தால் பொங்கல் மற்றும் கோவில் திருவிழாக்களுக்கு தேவையான பானை உள்ளிட்ட பொருட்களை செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.