போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு செங்கல் உற்பத்தியாளர்கள் மனு

0
61

கோவை சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயத்தின் தடை உத்தரவால் செங்கல் சூலைகள் தற்போது இயங்குவதில்லை.

இந்த நிலையில் செங்கல் சூளைகள் நடத்தி வந்த ஒரு சிலர் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தங்கள் இடங்களை விற்பனை செய்ய முயன்று வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தனியார் அமைப்பு பெயரில் கடிதம் ஒன்று தடாகத்தை சேர்ந்த ஒரு சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பசுமை தீர்ப்பாயம் வழக்கு நடைபெற்று வருவதால் இந்த இடங்களை யாரும் வாங்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவலை அறிந்த செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தலைவர் ஜெம் பழனிச்சாமி தலைமையில் தடாகம் ேபாலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கேட்டு புகார் மனுவை அளித்துள்ளனர்.

அந்த மனுவில் தனியார் அமைப்பின் மூலம் வந்த கடிதத்தில் தவறான கருத்துக்கள் மூலம் பொது மக்களை குழப்பம் அடைய செய்து வருவதாகவும், அவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.