அதிகாரிகள் சோதனை
கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாநகராட்சி சார்பில் நேற்று முன்தினம் சிங்காநல்லூர் பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு நூதன முறையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சியின் எச்சரிக்கையையும் மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக சிறப்பு குழு அமைத்து அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின்பேரில் தாமஸ்வீதி, ஆர்.ஜி.வீதி ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
46 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
இந்த சோதனையின் போது, பல கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து 46 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த கடைகளுக்கு ரூ.15 ஆயிரத்து 300 அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகம் மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கேரி பேக்கிற்கு பதிலாக மஞ்சப்பை போன்ற மாற்றுப் பொருட்களை பயன்படுத்தலாம். தவறும்பட்சத்தில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றனர்.