சாலை விரிவாக்க பணி

0
62

போக்குவரத்து நெரிசலை தீர்க்க சரவணம்பட்டி-கரட்டுமேடு சாலையை விரிவுபடுத்தும் பணியை தொடங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சாலை விரிவாக்க பணி

திண்டுக்கல்லில் இருந்து சத்தியமங்கலம் வரை செல்லும் சாலையை விரிவுபடுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கி உள்ளனர். இதில் திண்டுக்கல் முதல் கோவை வரை சாலை விரிவாக்கம் மற்றும் பாலங்கள் கட்டுதல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கோவை முதல் சத்தியமங்கலம் வரை சாலையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது கோவை முதல் சத்தியமங்கலம் வரை சாலை விரிவாக்கத்திற்கான ஆய்வு பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சரவணம்பட்டியில் இருந்து கரட்டுமேடு வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

200 மரங்கள் அகற்றம்

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சரவணம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம் வரையிலான சாலையை விரிவுபடுத்தும் பணிக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது இந்த பகுதியில் சாலை விரிவாக்க பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். இதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் பகுதியிலும், சரவணம்பட்டி பகுதியிலும் சாலை விரிவாக்க பணிகளை தொடங்கியுள்ளோம்.

இதில் சரவணம்பட்டியில் இருந்து கரட்டுமேடு வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் அகலம் 7 மீட்டர் மட்டுமே உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. இதை தீர்க்க சென்டர் மீடியன் அமைத்து சாலையின் இருபுறமும் 5.5 மீட்டர் தூரத்திற்கு அகலப்படுத்தும் பணிகள் தொடங்குகின்றன. இதில் முதல் கட்டமாக சாலையின் இருபுறமும் உள்ள சுமார் 200 மரங்களை அப்புறப்படுத்தி மின்கம்பங்களை சாலையின் ஓரத்திற்கு மாற்றி அமைக்கும் பணிகளை செய்த பிறகு விரிவாக்க பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.