புதுடெல்லி,
பாகிஸ்தான் பயங்கரவாதம் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செயல்படுபவர்கள் நல்ல பயங்கரவாதிகள் என்றும், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கெட்டவர்கள் என்று வெளிப்படையாகவே கொண்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் நுழைய செய்து வருகிறது. எல்லைத் தாண்டிய தாக்குதலுக்கு பயங்கரவாதிகளை பயன்படுத்துகிறது. இப்போது இவ்விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா-ரஷியா கூட்டாக எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் இடையிலான மாநாட்டை அடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் பாகிஸ்தானுக்கு மறைமுகமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு இரு நாடுகளும் கண்டனம் தெரிவிப்பதாகவும், பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை நிலைபாட்டை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்கப்படும் சர்வதேச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலான நடவடிக்கைக்கு எதிராக தீர்க்கமான பதிலடி தேவையெனவும் இருதரப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.