கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ்

0
67

குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இதில் தமிழ்நாடு எச்.எம்.எஸ் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை மாவட்ட பொது செயலாளர் மனோகரன், செயல் தலைவர் பழனிசாமி, செயலாளர் தேவராஜன் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் என்று 17 நல வாரியங்கள் அமைக்கப்பட்டு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். அவர்கள் நலன் காத்திடவும், பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையிலும் பொங்கல் போனசாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து எளிமையாக தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கின்ற வகையில் எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதிவு பெற்ற கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஆண் குழந்தைக்கு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிப்பதற்கு உதவி தொகை வழங்க வேண்டும். மேலும் கட்டுமான நல வாரியத்தில் வழங்கக்கூடிய உதவித்தொகையை போல் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கோவில் உண்டியல்

இந்து மக்கள் கட்சியை(தமிழகம்) சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கலெக்டர் அலுவலகத்துக்கு சங்கு ஊதியவாறு வந்து அளித்த மனுவில், கோவை மேற்கு தொடர்ச்சி மலை போளூவாம்பட்டி வனப்பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியலை கோவை இந்து சமய அறநிலை துறை நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

சமூக நீதிக்கட்சி சார்பில் பன்னீர் செல்வம் அளித்த மனுவில், கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டத்தை ரத்த செய்ய வேண்டும். மேலும் கோவை மாநகராட்சி 78 மற்றும் 79-வது வார்டு பகுதியில் பொது குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற மாமன்ற கூட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.