சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி நூதன போராட்டம், கலெக்டரிடம் மனு

0
117

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் நடைபாதை வசதி, புதிய ரே‌ஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர், கோவை கலெக்டர் அலுவலகம் அருகே கைகளில் திருவோடு ஏந்தி பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

கோவை மாநகராட்சியில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிலையில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை மாநகராட்சி நிர்வாகம் திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வசந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் குட்கா, மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை கைகளில் ஏந்தியபடி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, புகையிலை பொருட்களுடன் செல்ல அனுமதிக்க முடியாது என்றனர். பின்னர் அவர்கள் மதுபாட்டில்கள், புகையிலை பொருட்களை கீழே வைத்துவிட்டு சென்று மனு அளித்தனர்.

அதில், தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கோவையில் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். மேலும் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

சித்தாபுதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், கோவை சித்தாபுதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் 216 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள். மேலும் கோவை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றோம். நாங்கள் வசித்து வரும் வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அதை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்ட அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக எங்களை வீடுகளை காலி செய்யும்படி அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். நாங்களும் வீடுகளை காலி செய்ய தயாராக உள்ளோம். எனவே எங்களுக்கு மாநகராட்சி எல்லைக்குள் மாற்று இடம் வழங்கி தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். கோவை பி.ஆர்.எஸ். செங்காடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டுத்தொழுவம், சித்தாபுதூர், காந்திபுரத்தில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமாக காலியிடங்களில் எங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

கணியூர் சங்கோதிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கிணத்துக்கடவு பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், கோவை– பொள்ளாச்சி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக எங்கள் பகுதியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த மேம்பாலத்தை ஒட்டி அமையும் சர்வீஸ் சாலையின் நடுவே தடுப்பான்கள் வைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. எனவே இந்த தடுப்பான்களை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.