களிமண் எடுக்க அனுமதி கிடைக்குமா… மண்பாண்ட தொழில் புத்துயிர் பெறுமா?

0
86

நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில் புத்துயிர் பெற களிமண் எடுக்க அனுமதி கிடைக்குமா? என்று தொழிலாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மண்பாண்ட தொழில்

முந்தைய காலங்களில் மண்பாண்ட பொருட்கள் தயாரித்து கொடுத்தால், விவசாயிகள் தானியங்களை கொடுப்பார்கள். இந்த காலத்தில் மண்பாண்டங்களை உற்பத்தி செய்து, தொழிலாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். முன்பு இருந்த வரவேற்பை விட, தற்போது மண்பாண்ட தொழிலுக்கு அதிக மவுசு ஏற்பட்டு உள்ளது.

கிராமப்புறங்களை விட நகரப்புறங்களில் பானை, விளக்கு போன்ற களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களை மக்கள் அதிகம் வாங்குகின்றனர். இந்த பொருட்கள் செய்ய மூலப்பொருளாக களிமண் உள்ளது. ஆனால் அந்த களிமண் பற்றாக்குறையால், மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருகிறது.

இதற்கிடையில் கார்த்திகை பண்டிகை அடுத்த மாதம்(டிசம்பர்) 6-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் மண் கிடைக்காததால் விளக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. விளக்கிற்கு போதிய கிராக்கி இருந்தும் உற்பத்தி செய்ய முடியாததால் தொழிலாளர்கள் வேதனை அடைந்து உள்ளனர். இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அனுமதி இல்லை

வதம்பசேரி காளிதாஸ்:-

கோதவாடி குளத்தில் மண் எடுத்து மண்பாண்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தோம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மண் எடுக்க அனுமதி கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு வரை கோவை தெற்கு மாவட்டத்தில் 150 குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலை செய்து வந்தனர். தற்போது 100 குடும்பத்தினர்தான் தொழில் செய்கின்றனர். இதில் 50 குடும்பத்தினர் தான் விளக்கு தயாரிக்கின்றனர். தொழில் நலிவடைந்து வருவதால் பெரும்பாலான மண்பாண்ட தொழிலாளர்கள் கட்டிட வேலை உள்பட கூலி வேலைக்கு செல்கின்றனர். அடுத்த தலைமுறையினர் மண்பாண்ட தொழிலை செய்வது கடினம். இதனால் பராம்பரியமிக்க இந்த தொழில் அழிவின் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பற்றாக்குறை

ஆர்.பொன்னாபுரம் புஷ்பலதா:-

கோதவாடி குளத்தில் மண் எடுத்து 2 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதனால் பானை, விளக்கு போன்ற மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. கோவை இருகூர் பகுதியில் இருந்து ரூ.12 ஆயிரம் கொடுத்து மண் வாங்கி வந்து விளக்கு செய்கிறோம். கோவை, திருப்பூர், அவினாசி போன்ற பகுதிகளில் இருந்து வந்து விளக்குகளை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். மொத்த வியாபாரிகளுக்கு 1000 விளக்கு ரூ.900-க்கு கொடுக்கிறோம். இதே சில்லறை விலைக்கு ஒரு விளக்கு ரூ.1.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு விளக்கு 70 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு உற்பத்தி குறைவு, மண் எடுத்து வரும் செலவு போன்ற காரணங்களால் விலை கட்டுப்பாடியாகவில்லை. கொரோனா பரவலுக்கு பிறகு இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருநாளை மக்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் மண் பற்றாக்குறையால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மண் வழங்கினால் அதிகளவில் பானை உற்பத்தி செய்ய முடியும்.

உருவார பொம்மைகள்

ஆவல் சின்னாம்பாளையம் சுப்பிரமணியம்:-

தை மாதத்திற்கு பிறகு கோவில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெறும். கோவிலுக்கு தேவையான உருவார பொம்மைகள், கலசங்கள், பூவோடு ஆகியவற்றை தயாரிக்க வேண்டும். தேவிபட்டிணத்தில் மட்டும் தைப்பூச விழாவிற்கு காவடி கலசத்திற்கு 1,000 கலசங்கள் செய்ய வேண்டும். மாட்டு கரப்பான் கோவில் திருவிழாவிற்கு 3 ஆயிரம் உருவார பொம்மைகள் செய்ய வேண்டும். ஆனால் மண் இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. உடல்நிலை சரியில்லை என்றால், உடல் நிலை பாதித்தவரின் கை, கால்கள் மற்றும் உருவத்தை செய்து கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இதேபோன்று கோவிலுக்கு தேவையான குதிரை, காளைகள் போன்ற உருவங்களை செய்து கொடுப்போம். இவற்றை தயாரிக்க அதிகளவு மண் வேண்டும். ஆனால் மண் கிடைக்காததால், இவற்றை உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

குடும்பத்துக்கு 5 யூனிட் மண்

ஆனைமலை ஹரிகரன்:-

கோவை தெற்கு மாவட்ட பகுதிகளில் மண் கிடைக்காததால் விளக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தெற்கு மாவட்டத்தில் மட்டும் 10 லட்சம் விளக்குகள் தயாரிக்கப்படும். ஆனால் மண் கிடைக்காததால் தற்போது 2 லட்சத்திற்கும் குறைவான விளக்குகளே தயாரிக்கப்படுகிறது. உள்ளூரில் உற்பத்தி குறைந்ததால் விருதாச்சலம் போன்ற பகுதிகளில் இருந்து செராமிக்ஸ் கொண்டு எந்திரத்தில் தயாரிக்கப்படும் விளக்குகள் லட்சக்கணக்கில் இறக்குமதி செய்யப்படுகிறது. மண்பாண்ட தொழிலை செய்யும் ஒரு குடும்பத்திற்கு 5 யூனிட் மண் வழங்கினால்தான், இந்த தொழிலை காப்பாற்ற முடியும். இந்த தொழிலை நம்பிதான் குழந்தைகளை படிக்க வைத்தும், வாழ்க்கை நடத்தியும் வருகிறோம். மண் கிடைக்காததால் தொழில் செய்ய முடியவில்லை. தொழிலுக்கு வாங்கிய கடனையும் செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றோம். எனவே கோதவாடி குளத்தில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.