ஆனைமலை பகுதியில் பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது. மேலும் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
பலத்த மழை
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆத்து பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள். மாற்றுத்திறனாளி. இவரது கணவர் நாகராஜ். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் நாகம்மாளும் இவரது பேத்தியும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவுநீரும் சாலைகளில் மழைநீருடன் வெள்ளம் போல் பெருக்கெடுத்து சென்றது. இந்த மழை காரணமாக நாகம்மாளின் வீட்டின் சமையல் அறை சுவர் இடிந்து விழுந்தது. மேலும் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டின் வெளிப்புறம் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் பாட்டியும், பேத்தியும் அதிா்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதுகுறித்து அறிந்ததும் அதிகாரிகள் அங்கு சென்று, இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தாசில்தார் மாரீஸ்வரன் கூறுகையில், ஆத்து பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் வீட்டின் சமையலறை சுவர் சேதம் அடைந்ததற்கு அரசின் நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.
வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது
இதேபோல் ஆனைமலை நெல்லிக்குத்து பாறையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் மழை நீருடன் கலந்து வணிக வளாகங்கள் மற்றும் 5-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. அதனால் சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.