ரூ.7 கோடியில் கட்டியும் பயன்படாத மாதிரி பஸ்நிலையம்
நடவடிக்கை எடுக்கப்படுமா?
கோவை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மேட்டுப்பாளையம், ஊட்டியில் இருந்து வரும் நகருக்குள் வராமல் நின்று செல்ல வசதியாக கடந்த 2011-ம் ஆண்டு கோவை- மேட்டுப் பாளையம் சாலையில் ரூ.7 கோடியில் மாதிரி பஸ்நிலையம் கட்டப்பட்டது.
இங்கு மின்தடை ஏற்படும் போது தானாகவே மின்சாரம் கிடைக் கும் வகையில் சோலார் வசதி, சிறிய காற்றாலை அமைக்கப்பட் டது. இங்கு முதல் தளத்துக்கு செல்லும் வகையில் லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. ஒரு பஸ் நிலையம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மாதிரியாக இந்த பஸ்நிலையம் அமைக்கப்பட்டது.
பரபரப்பாக இருந்தது
கோவை காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி, கோத்தகிரி செல்லும் பஸ்கள் கோவை- மேட்டுப்பாளையம் சாலைபஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. அந்த பஸ் நிலையத்தில் இருந்து காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் ஊட்டி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து கோவை- மேட்டுப்பாளையம் சாலை பஸ் நிலையத்துக்கு வருபவர்கள், மீண்டும் டவுன் பஸ்சில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்தனர். இதனால் மாதிரி பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக இருந்தது.
எதுவும் செயல்பட வில்லை
மேலும் இங்கிருந்துதான் கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பெங்களுரு, மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஊட்டி, மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் பஸ்கள் மாதிரி பஸ் நிலையத்தில் சில நிமிடங்கள் மட்டுமே நின்று விட்டு காந்திபுரத்துக்கு சென்று விடுகிறது. இதனால் மாதிரி பஸ் நிலையம் பயன்பாடு இன்றி கிடக்கிறது.
அங்கு பயணிகள் வருவதும் வெகுவாக குறைந்து விட்டது.
மேலும் போதிய பராமரிப்பு இல்லாததால் மாதிரி பஸ் நிலையம் மோசமாக காட்சி அளிக்கிறது. மேற்கூரைகள் உடைந்து உள்ளது. காற்றாலையின் இறகுகளை மாயமாகி விட்டது. சோலார் மின்தகடுகளும் இயங்க வில்லை.
ஒரு பஸ்நிலையம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக கட்டப்பட்ட மாதிரி பஸ்நிலையம், தற்போது ஒரு பஸ் நிலையம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அடையாளமாக காட்சி அளிக்கிறது.
இது குறித்து பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கடைபிடிப்பது இல்லை
கோவையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், மற்றும் தென் மாவட்டங்களுக்கு சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்தும், பொள்ளாச்சி, உடுமலை, பழனி பகுதிகளுக்கு உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் காந்திபுரத்துக்கு வருவது இல்லை.
அதுபோன்று தான் மேட்டுப்பாளையம், ஊட்டி, கோத்தகிரி, கூடலூரில் இருந்து வரும் பஸ்கள் மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையத்துக்கு வந்தன. அங்கிருந்தே திரும்பி சென்றன.
ஆனால் தற்போது அந்த பஸ்கள் காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு வருவ தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் மாதிரி பஸ் நிலையம் கட்டியதன் நோக்கம் நிறைவேற வில்லை. அந்த பஸ் நிலையமும் பயன்பாடு இன்றி கிடக்கிறது.
உடனடி நடவடிக்கை
இதனால் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட மாதிரி பஸ்நிலை யம் தற்போது வீணாகி விட்டது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தனர்.
அப்போது மாதிரி பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை மாதிரி பஸ் நிலையத்துக்குள் வந்து நின்று பஸ்கள் செல்ல வில்லை.
தற்போது பஸ் நிலையத்துக்குள் கடைகள் எதுவும் இல்லை. இதனால் கடைகள் இருந்த இடம் இரவு நேர பாராக மாறி விட்டது. அங்காங்கே மதுபாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மாதிரி பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.