சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

0
68

சேறும் சகதியுமான சாலை

கிணத்துக்கடவை அடுத்த கொண்டம்பட்டியில் இருந்து அரசம் பாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக சொலவம்பாளையம், அரசம்பாளையம், மயிலேறிபாளையம், காரச்சேரி, பணப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலை வழியாகவே விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த விவசாய பயிர்களை கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோல் அந்த சாலையை பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் அவதி

மேலும் இந்த சாலை பழுதடைந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு குண்டும் குழியுமான காணப்படுகிறது. தற்போது அதில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை இருப்பது தெரியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

கொண்டம்பட்டி- அரசம்பாளையம் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கிறது. அதை சீரமைக்க கோரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை சரி செய்ய வில்லை. இது பற்றி கேட்டால் இந்த சாலை விரிவு படுத்தப்பட உள்ளதாக கூறுகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இதனால் தற்போது பெய்த மழை காரணமாக அந்த சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மாணவர்கள், பெண்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலையை பார்வையிட்டு விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.