போக்குவரத்து பாதிப்பை தடுக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை

0
87

பருவமழை

வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதில், வால்பாறை நகரம் மற்றும் எஸ்டேட் பகுதியில் குறைந்த அளவே மழை பெய்து வருகிறது. ஆனால் வால்பாறை- பொள்ளாச்சி மலைப் பாதை சாலையில் அட்டகட்டி முதல் ஆழியாறு வரை அவ்வப் போது மிதமான மழை பெய்து வருகிறது.

இதனால் பொள்ளாச்சி கோட்டம் வால்பாறை உட்கோட்ட நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் அட்டகட்டி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

அதிகாரி ஆய்வு

மேலும் வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் மழைநீர் வடிகால்கள், சிறுபாலங்களில் அடைப்புகள் உள்ளதா என்று கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

அட்டகட்டி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உதவி கோட்ட பொறியாளர் உமாமகேஸ்வரி தலைமையில் மண்சரிவை தடுக்க மணல் மூட்டைகள் போதிய எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

வடிகால்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய மரக்கொம்பு, சாலைகளில் மரம் விழுந்தால் அவற்றை அறுத்து அப்புறப்படுத்த மரம் அறுக்கும் எந்திரங்களும் போதிய அளவில் வைக்கப்பட்டு உள்ளது.

விழிப்புடன் இருக்க வேண்டும்

மழை காலங்களில் வால்பாறையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் ஆயத்த நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இரவு, பகல் என எந்த நேரத்திலும் நெடுஞ்சாலைத்துறையினர் விழிப்புடன் இருந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.