கோவை கலெக்டர் அலுவலகம் முன் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள், மனு கொடுக்க வந்த பொதுமக்களின் உடைமைகளை சோதனை செய்த பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.
கூட்டத்தில், பல்வேறு அமைப்பினர், முதியோர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். அப்போது மனு அளிக்க வந்த 2 பெண்கள் திடீரென்று தங்களது பையில் மறைத்து கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
வீட்டு மனைப்பட்டா
இதை பார்த்த போலீசார் ஓடி சென்று அவர்களிடம் இருந்த பாட்டிலை பிடுங்கினர். பின்னர் அவர்களின் உடலில் தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் உக்கான் நகரை சேர்ந்த நாகமணி (வயது 48), அமுதா (50) என்பது தெரிய வந்தது.
அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-
எங்களுக்கு அரசு சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில் வீடு கட்டி குடியிருந்து வந்தோம். இந்த நிலையில் எங்களின் வீடுகளை அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் ஆக்கிரமித்து கொண்டு எங்களுக்கு தர மறுக்கின்றனர்.
மனு அளித்தனர்
இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்திற்கு பல முறை மனு அளித்தோம். ஆனால் அதிகாரிகள் மீட்டு தரவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நாங்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றோம் என்றனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் கலெக்டரிடம் மனு அளிக்க அந்த 2 பெண்களையும் அழைத்து சென்றனர். அவர்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.