ரேஷன் கடையை சூறையாடிய காட்டுயானைகள்

0
81

ஊசிமலைடாப் எஸ்டேட்டில் ரேஷன் கடையை காட்டுயானைகள் சூறையாடின. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

ரேஷன் கடை

மலைப்பிரதேசமான வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி தேயிலை தோட்டங்கள் வழியாக குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறை அருகே ஊசிமலை டாப் எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில் ரேஷன் கடை உள்ளது.

காட்டுயானைகள்

அங்கு 3 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் புகுந்தது. தொடர்ந்து ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. மேலும் ரேஷன் அரிசியை தின்றதோடு சிதறடித்து சூறையாடின. இதை கண்ட தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். பின்னர் கூச்சலிட்டு காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.

அந்த ரேஷன் கடையில் இன்னும் அரிசி மூட்டைகள் இருப்பில் இருக்கிறது. இதனால் மீண்டும் காட்டுயானைகள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவை தொழிலாளர் குடியிருப்புக்கு அருகில் உள்ள வனப்பகுதியில்தான் முகாமிட்டுள்ளன. மீண்டும் ஊருக்குள் வந்தால் குடியிருப்பு பகுதிகளையும் சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பீதியில் உள்ளனர்.

ரோந்து பணி

இதை அறிந்த வால்பாறை வனச்சரக வனத்துறையினர் தொடர்ந்து அக்காமலை, ஊசிமலை, வெள்ளமலை, கருமலை ஆகிய எஸ்டேட் பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் ரேஷன் கடையை தொடர்ந்து காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகிறது. எனவே அடுத்த ஆண்டு(2023) ஏப்ரல் மாதம் வரை ரேஷன் கடைகளில் அரிசிகளை அதிகளவில் இருப்பில் வைக்காமல் பயன்பாட்டுக்கு தேவையான அரிசியை மட்டும் அவ்வப்போது குடோனில் இருந்து எடுத்து வந்து வினியோகம் செய்ய வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.