பீடி தர மறுத்ததால் கல்லால் தாக்கி கொன்றோம்

0
237

கணபதியில் நடந்த தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பீடி தர மறுத்ததால் கல்லால் தாக்கி கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி கொலை

கோவை கணபதி ராஜ வீதியைச் சேர்ந்தவர் வெங்கட் என்ற வெங்கடேஷ் (வயது 53), கூலித் தொழிலாளி. இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடேஷ் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்று ராமநாதபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மாநகராட்சி நகர் நல மையத்தில் வெங்கடேஷ் முகத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து வெங்கடேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அவரை 2 பேர் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வெங்கடேசை கல்லால் தாக்கி கொன்றது தெரியவந்தது.

பீடி கேட்டதால் தகராறு

போலீஸ் விசாரணையில் அவர்கள் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 26), நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த சரவணன் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நாங்கள் 2 பேரும் கணபதி நகர்நல மையத்தின் அருகே உள்ள பிளாட்பாரத்தில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தோம். சம்பவத்தன்று இரவு நாங்கள் 2 பேரும் மது போதையில் இருந்தோம். அப்போது அந்த வழியாக வெங்கடேஷ் மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்த நாங்கள் அவரிடம் சென்று பீடி கேட்டோம். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார். மேலும் எங்களது குடும்பம் குறித்து அவதூறாக பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் கீழே கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கினோம். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்தார். பின்னர் நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டோம் என்றனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.