3 கோவில்களை தகர்க்க சதி திட்டம்

0
146

கார் வெடிப்பு சம்பவம்

கோவை கோட்டைஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி அதிகாலை 4.10 மணியளவில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் (வயது28) என்பவர் பலியானார்.

இதைத்தொடர்ந்து ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது அசாருதீன் (23), முகமதுரியாஸ் (27) பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), முகமது தல்கா (25), அப்சர்கான் (28) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 75 கிலோ வெடி மருந்து உள்பட 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு விசாரணையில், கோவையில் உள்ள 3 முக்கிய கோவில் களை தகர்க்க சதி செய்தது உள்பட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்விவரம் வருமாறு:-

வெடிகுண்டு தயாரிப்பு

பலியான ஜமேஷா முபின் மற்றும் அவருடைய உறவினர்களான அசாருதீன், அப்சர்கான் ஆகியோர் காந்திபார்க்கில் 2 கியாஸ் சிலிண்டர்களும், உக்கடம், லாரிபேட்டை பகுதியில் 3 இரும்பு டிரம்களும் வாங்கி உள்ளனர். அதற்கான ரசீதுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை ஆன்லைன் மூலம் அப்சர்கான் வாங்கி கொடுத்துள்ளார்.

இதையடுத்து முபின் மற்றும் அவருடைய கூட்டாளிகள் யூடியூப்பில் வெடிகுண்டு தயார் செய்வது எப்படி? என்று பார்த்து அதை தயாரிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து தங்களின் திட்டங்களை செயல்படுத்த இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

3 இடங்கள் தேர்வு

அதன்படி பலியான ஜமேஷா முபின் வீட்டருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோனியம்மன் கோவில், 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புலியகுளம் முந்திவிநாயகர் கோவில் ஆகிய 3 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தேர்வு செய்து உள்ளனர்.

அங்கு தங்களின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒத்திகை பார்க்க 3 பேரும் முடிவு செய்தனர். இதற்காக ஜமேஷாமுபின், அப்சர்கான், அசாருதீன் ஆகியோர் அந்த பகுதிகளுக்கு பல முறை சென்று நோட்டமிட்டு உள்ளனர். அங்கு தங்களின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நேரம், ஆட்கள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு உள்ளனர்.

கண்காணிப்பு கேமரா பதிவு

முதலில் கோட்டை ஈஸ்வரன்கோவில் முன்பு இந்த திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்து, ஜமேஷாமுபின் காரில் 2 கியாஸ் சிலிண்டர்கள், வெடிபொருட்களுடன் சென்று கியாசை திறந்து விட்டு வெடிக்க செய்யவது என்று முடிவு செய்தனர்.

மேலும் அவர்கள், கோவில்கள் உள்ள பகுதிக்கு அடிக்கடி சென்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர்.

துப்பு துலங்கினோம்

ஜமேஷா முபின் மற்றும் கூட்டாளிகளுக்கு வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணத்துவம் இல்லாததால் அவர்களின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனால் பெரிய அளவிலான சேதம் மற்றும் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கில் துப்புத்துலக்கிய கோவை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் தற்போது இந்த வழக்கில் 90 சதவீதம் துப்புத்துலங்கி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துவிட்டோம்.

இதில் அசாருதீன், அப்சர்கான் ஆகியோர் ஜமேஷா முபினுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டு உள்ளனர். ஜமேஷா முபின், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வாடகைக்கு வீடு பார்த்து 3 மாதங்களாக தங்கி இருந்துள்ளார். அடுத்த கட்ட விசாரணையை என்.ஐ.ஏ. தொடங்கும் என்றனர்.

ஒற்றை ஓநாய் தாக்குதலா?

கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்து ஜமேஷா முபின் இறந்த சம்பவம், ஒற்றை ஓநாய் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இது பயங்கரவாத அமைப்பின் உதவி இன்றி தனியாக தாக்குதல் நடத்தும் முறை ஆகும்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, முபின் இறந்த பின், அவரது உறவினர்கள் உள்பட பலர் இந்த சதியில் கைது செய்யப்பட்டு உள்ளனர். எனவே ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை என்று கூற முடியாது என்றனர்.