திக்கெட்டும் அருள் பொங்கும் கொங்குநாட்டு கோயில்கள்!
அருள் தரும் ஆலயங்கள்
கோவை- கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் இந்தப் பெருநகரம், தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குவதற்குக் காரணம், இங்கு அமைந்திருக்கும் கோயில்களும், மக்களின் குறைதீர்க்கும் தெய்வங்களுமே!
1. தண்டுமாரியம்மனுக்கு நெய் விளக்கு!
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்த திப்புசுல்தானின் பெரும்படைகள் கோவைக் கோட்டையில் முகாமிட்டிருந்தன. படை வீரர்களில் ஒருவன், அம்பாள் உபாஸகன். அவன் கனவில் தோன்றிய அம்பிகை, தான் யுகம் யுகமாக இந்த இடத்தில் வசிப்பதாகவும், நீர்ச் சுனைக்கு அருகில், வேப்ப மரங்களும் செடி- கொடிகளும் நிறைந்த இடத்தில் வீற்றிருப்பதாகவும் கூறினாள்.
மறுநாள் காலையில், அம்பிகை குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றான் படைவீரன். அங்கே, தெய்வீகம் பொங்கும் விக்கிரக ரூபமாகக்காட்சி தரும் அம்பாளைக் கண்டு மெய்சிலிர்த்தான். நல்லதொரு சுபமுகூர்த்த தினத்தில், சின்னதாக மேடை அமைத்து, அதில் அம்பாளை எழுந்தருளச் செய்தான். கூடாரத்தில் தங்கியிருந்த படைவீரனின் கனவில் வந்து தன்னை வெளிப்படுத்தியதால், இந்த அம்பாளுக்கு ஸ்ரீதண்டுமாரியம்மன் என்று பெயர் வந்ததாம் (வீரர்கள் தங்கும் கூடாரத்தைத் ‘தண்டு’ என்பர்).
தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகள் இங்கு வந்து, ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட, திருமணத் தடைகள் நீங்கும்; குழந்தை உருவ பொம்மையைக் காணிக்கை செலுத்துவதாக நேர்ந்துகொண்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
2. காமதேனு அருள்பெற்ற பட்டீஸ்வரம்!
காமதேனுவுக்கு அருள்புரிந்த சிவப் பரம்பொருள், அந்தத் தெய்வப் பசுவுக்கு ஏற்றம் தரும் வகையில், தனது லிங்கத் திருமேனியில் கொம்பு மற்றும் கால்குளம்பின் சுவடுகளுடன் காட்சி தரும் அற்புதத் திருத்தலம்- பேரூர் பட்டீஸ்வரம். காமதேனுபுரி, பட்டிபுரி என்றும் போற்றுவர். இங்கு கோயில் கொண்டிருக்கும் ஈசனுக்கு, ஸ்ரீபட்டிஸ்வரர் என்பது திருநாமம். அம்பாள்- ஸ்ரீபச்சைநாயகி.
இங்குள்ள ஸ்ரீநடராஜப் பெருமானின் திருமேனி, கொள்ளை அழகு! இதனாலேயே, கொங்குச் சோழர்கள் இந்தக் கோயிலை ‘மேலைச் சிதம்பரம்’ என்று போற்றியுள்ளனர். பேரூர் ஆலயம் வந்து ஆடல்வல்லானைத் தரிசித்து வழிபட, கல்வி-கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. ஸ்ரீபட்டீஸ்வரரிடம் வந்து முறையிட்டால் காணாமல் போன பொருள்கள் விரைவில் திரும்பக் கிடைக்கும் என்கின்றனர்.
3. பண்ணாரி மாரியம்மன்!
கோவை- மைசூர் பாதையில், சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீபண்ணாரி மாரியம்மன். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், அம்மன் சுயம்புவாகத் தோன்றிய திருத்தலம் இது என்கின்றனர்.
தினமும் இந்தத் திருவிடத்துக்கு வரும் பசு மாடு ஒன்று, இங்கே வேங்கை மரத்தடியில் இருந்த புதரின் மீது பால் சொரியுமாம். இதைக் கண்ட கிராமத்தவர்கள், ஒருநாள் அந்தப் புதரை விலக்கிப் பார்க்க, அம்பிகையின் சுயம்பு விக்கிரகத்தைக் கண்டு சிலிர்த்துப்போனார்கள். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவரிடம் அருளாக வந்திறங்கிய அம்மன், ”இங்கே குடியிருக்கும் நான் எல்லோருக்கும் பாதுகாவலாக இருப்பேன்.
கேரளா மற்றும் கோவையில் இருந்து மைசூர் செல்லும் வணிகப் பெருமக்களுக்கு உறுதுணையாக இருந்து அருள்பாலிப்பேன்” என்றாளாம்.
தினமும் 4 கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், பங்குனி மாதத்தில் குண்டம் திருவிழா விசேஷம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்க வருகிறார்கள்.
இதனால், வேண்டியது நிறைவேறும், நோய்நொடிகள் எதுவும் அண்டாது என்பது நம்பிக்கை. தங்க ரதம் வடம் பிடித்தல் மற்றும் ஆடி நோன்பு முதலான வழிபாடுகளும் இங்கே பிரசித்தம்.
4. முதல் அழைப்பு கோணியம்மனுக்கு!
கோவை- ஸ்ரீகோணியம்மன் ஆலயம், 13-ஆம் நூற்றாண்டில் இருளர்களால் கட்டப்பட்டது என்கிறது வரலாறு.
எதைச் செய்தாலும் இந்த அம்மனை வழிபட்டு விட்டுத் தொடங்குவதே கொங்கு மன்னர்களின் வழக்கமாம். இன்றும் இந்த அம்மனிடம் ஆசிபெற்ற பிறகே முக்கிய காரியங்களில் இறங்குகிறார்கள் கோவை மக்கள். கல்யாணம் முதலான சுபச் சடங்கு களின்போதும், முதல் பத்திரிகை கோணியம்மனுக்கே. துயரங்கள் தீரவும், நோய்கள் விலகவும், எண்ணியது நிறைவேறவும் வேண்டி, கோணியம்மனை மனதார வழிபடுகின்றனர்.
இங்கு வந்து மஞ்சள்காப்பு சாத்துவது, உப்பு இடுவது போன்ற நேர்த்திக்கடன்களைச் செய்வதன் மூலம் அம்மனின் பரிபூரண அருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோணியம்மன் கோயில் தேர்த் திருவிழா வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படும். அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுமாம். மேலும் நவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ஆடி வெள்ளி, ஆடிப் பதினெட்டு ஆகிய விழாக்களும் சிறப்புற நடைபெறுகின்றன. கோவை சென்ட்ரல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீகோணியம்மன் திருக்கோயில்.
5. மருதமலைக்கு வந்து பாருங்க..!
முருகப்பெருமானின் படைவீடுகள் அமைந்திடாத மாவட்டம் கோவை என்றாலும், படை வீடுகளுக்கு இணையான மருதமலையைப் பெற்றுத் திகழ்கிறது. மருத மரங்கள் நிறைந்திருப்பதால் மருதமலை எனும் பெயர் வந்தது என்கிறார்கள்.
இந்த மலைக்கு வந்த சித்தர் ஒருவர் தாகத்தால் தவித்தாராம். தாகம் தணிக்கத் தண்ணீர் தரும்படி முருகப் பெருமானிடம் வேண்டினாராம். மறுகணம், சுற்றிலும் இருந்த மருத மரங்களில் இருந்து தண்ணீர் கொட்டியதாம். சித்தரின் தாகம் தணிந்தது. இந்த அருளாடலால் மகிழ்ந்த அந்த சித்தர், ‘மருதாஜலபதி’ என முருகனைப் போற்றினாராம். இதுவே பின்னர் மருதாசலபதி ஆனதாகச் சொல்வர் (சலம் என்றால் மலை; மருதமலையில் வீற்றிருப்பதால் மருதாசலபதி என்றும் சிலர் விவரிப்பர்). அற்புதமான இந்த ஆலயம் தோன்றியது கி.பி.12-ல் என்கிறார்கள்!
தெய்வப்பசுவாம் காமதேனுவும் இங்கு வந்து வழிபட்டுள்ளதாகப் புராணங்கள் கூறும். தைப்பூசம், திருக்கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தமிழர் திருநாள் ஆகிய விழாக் காலங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாற்குடம், காவடிகள் சுமந்து வந்தும், முடி காணிக்கை செலுத்தியும், படி பூஜை செய்தும் முருகப் பெருமானை வழிபட்டுச் செல்கிறார்கள்.
இங்கு அருள்பாலிக்கும் தான்தோன்றிப் பிள்ளையா ரும் வரப்பிரசாதியானவர். பாம்பாட்டிச் சித்தர் தவமிருந்து முக்தி பெற்ற இந்தத் தலத்தில், சித்தரின் குகைக்குச் சென்று வழிபட, அவரின் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். மருதமலை முருகனை தனது இஷ்டதெய்வமாகப் போற்றிய, சாண்டோ சின்னப்பா தேவர் இந்தக் கோயிலுக்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்திருக்கிறார். கோவையில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது மருதமலை. நீங்களும் ஒருமுறை மருதமலை முருகனைத் தரிசித்து வாருங்கள்; உங்களின் தீராத வினைகளும் தீரும் பாருங்கள்!
6. ஈச்சனாரி பிள்ளையார்!
பேரூர், ஸ்ரீபட்டீஸ்வரர் ஆலயத்துக்காக விநாயகர் விக்கிரகம் ஒன்று வடிக்கப்பட்டு, மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்டது. சிலையைச் சுமந்து வந்த வண்டி, ஈச்சனாரி அருகில் வரும்போது நின்று விட்டது. எவ்வளவு முயன்றும் வண்டியை நகர்த்த முடியவில்லை. ‘பிள்ளையார் இந்த இடத்திலேயே தங்க விரும்புகிறார்போலும்’ என முடிவு செய்த மக்கள், ஈச்சனாரியில் பிள்ளையாருக்கு கோயில் எழுப்பினராம் (கி.பி. 1500-ல் கட்டப்பட்டது என்கின்றனர்).
பிரணவ சொரூபமாகக் காட்சி தருகிறார் ஈச்சனாரி பிள்ளையார். எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் தரிசனம் தெளிவாகக் கிடைக்கும்படி மூலவரை அமைத்துள்ளது சிறப்பு. கல்வி, கலை மற்றும்தொழிலில் சிறக்க, இந்தப் பிள்ளையாரை வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி, அமாவாசை, சரஸ்வதி பூஜை மற்றும் திருக்கார்த்திகை தீப விழா இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சனாரி பிள்ளையார் திருக்கோயில்.
7. குழந்தை வரம் அருளும் கோதண்டராமர்!
கோவையில் ஸ்ரீராமனுக்கு ஓர் ஆலயம் வேண்டும் எனும் விருப்பத்துடன் பக்தர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி ஆலயம், சுமார் 77 வருடங்கள் பழைமை வாய்ந்தது. சென்ட்ரல் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே கோயில்கொண்டிருக்கிறார் இந்த கோதண்டராமர்!
இங்கே சீதாதேவி மற்றும் தம்பி லட்சுமணனுடன் ஸ்ரீராமன் தெற்கு நோக்கிச் சந்நிதி கொண்டிருப்பது விசேஷ அம்சம். இவரின் சந்நிதிக்கு நேர் எதிரில் அனுமன் சந்நிதி. மேலும் இங்கு ஸ்ரீவிநாயகர், நவக்கிரக சந்நிதிகளையும் தனிச் சந்நிதியில் அருளும் லிங்க மூர்த்தத்தையும் தரிசிக்கலாம்.
ஐந்து நிலை கோபுரத்துடன் அழகுறத் திகழும் ஸ்ரீராமர் ஆலயத்தில், தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீராமநவமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில்…
கஷ்ட நிவர்த்திக்காக ஸ்ரீமகா சுதர்சன ஹோமம், வியாதி நிவர்த்திக்காக ஸ்ரீதன்வந்திரி ஹோமம், குழந்தைகளின் கல்வி சிறக்க ஸ்ரீஹயக்ரீவ ஹோமம் ஆகியன நடைபெறுகின்றன.
கலியுகத்தில் அனைத்து நன்மைகளையும் பெற்றுச் சிறக்கும் மார்க்கமாக, ஸ்ரீமந் நாராயணரால் நாரத முனிவருக்கு உபதேசிக்கப்பட்ட வழிபாடு- ஸ்ரீசத்ய நாராயண பூஜை. பௌர்ணமி தினங்களில் மாலை வேளையில் மிக அற்புதமாக நடைபெறுகிறது இந்த பூஜை. குழந்தை வரம் அருளும் தெய்வமான ஸ்ரீகோதண்டராமருக்குச் துளசி மாலை சமர்ப்பித்து வழிபட, துன்பங்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.
8. பிணி தீர்க்கும் காரமடைப் பெருமாள்!
கோவையிலிருந்து சுமார் 29 கி.மீ. தூரத்தில் உள்ளது காரமடை ஸ்ரீரங்கநாதர் ஆலயம். இந்தப் பெருமாளுக்கு ஸ்ரீஅரங்க வேங்கடேசன், ஸ்ரீஅச்சுதன் ஆகிய திருநாமங்களும் உண்டு. உற்ஸவர் ஸ்ரீவேங்கடேசபெருமாள் ஸ்ரீதேவி- பூதேவியுடன் அருள்கிறார். தாயார் அரங்கநாயகி; மலையில் குடிகொண்டிருப்பதால், ‘பெட்டத்து அம்மன்’ என்றும் திருப்பெயர் உண்டு. கோதை நாச்சியாரும் வரமருளும் நாயகியாய் இங்கு சந்நிதி கொண்டிருக்கிறாள்.
மூலவர் சுயம்புவாக, கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலமாகிய இங்கு, வைணவ சம்பிரதாயப்படி பஞ்ச சம்ஸ்காரங்களை இந்தத் தலத்தாரிடம் (பட்டர்களிடம்) பெற்று, அரங்கனுக்கு அடிமைப் பணி செய்யும் தாசர்களின் பந்த சேவை, தண்ணீர் சேவை, கவாள சேவை ஆகியன பாரம்பரியமானவை. நவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, திருத்தேர் விழா ஆகியன இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.
திருக்கல்யாண உற்ஸவத்தையட்டி, பெட்டத்து அம்மன் மலைக்குச் செல்லும் அர்ச்சகரே தாயாராக பாவிக்கப்பட்டு அழைத்து வரப்படுவார். பிறகு, ராமபாணம் சுழற்றும் வைபவமும், அவர்கள் கோயிலை அடைந்ததும் திருக்கல்யாணமும் சிறப்புற நடைபெறும்.
சுமார் 1,600 வருடங்கள் பழைமையானது இந்த ஆலயம்; சுயம்புவாகத் தோன்றிய பெருமாளுக்குத் திருமலை நாயக்கர் கட்டிய கோயில் இது! கரிகால் சோழன், மைசூர் மன்னர், கிருஷ்ணதேவ உடையார் ஆகியோரும் இங்கு வழிபட்டுள்ளனர்.
திருமலைநாயக்கரின் ராஜபிளவை நோய் தீர அருளியவர் இந்தப் பெருமாள். இவரை வழிபட, பக்தகோடிகளின் பிணிகளையும் நீக்கி அருள்புரிவார் என்பது நம்பிக்கை.