திணறும் கோவை மாநகரம்

0
92

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவையில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

பண்டிகையொட்டி பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்க ளுக்கு நேற்று முன்தினம் முதல் விடுமுறை விடப்பட்டது. இதனால் நேற்றுமுன்தினம் மாலையில் கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், மத்திய பஸ்நிலையம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து மதுரை, திருச்சி, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்தனர். சிலர் பஸ் ஜன்னல் வழியாக தங்களது உடைமைகளை தூக்கி போட்டு இடம் பிடித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

2-வது நாளாக நேற்றும் கோவை பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் காலை முதல் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினர். இதன் காரணமாக கோவை-அவினாசி ரோடு, திருச்சி ரோடு, சத்தி ரோடு உள்ளிட்ட ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நாளை (திங்கட்கிழமை) தீபாவளி என்பதால் புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க கோவை ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, டவுன்ஹால், கிராஸ் கட்ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கடை வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒப்பணக்கார வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம் வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் ஜவுகளிகள், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வாகனங்களை சிலர் சாலையோரங்களில்நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்கினர். இதனால் இடையூறு ஏற்பட்டது.

போலீசார் கண்காணிப்பு

பொதுமக்கள் கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படி செய்யும் நபர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படி ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவுரைகள் வழங்கினர். மேலும் சாலையில் வாகனங்களை நிறுத்தும் பயணிகளை ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து அங்கிருந்து உடனடியாக வாகனங்களை எடுத்து செல்லும்படி கூறினர்.