நெகமம் பகுதியில் விலை குறைவு காரணமாக விளைநிலங்களில் கொத்தமல்லி இலையை பறிக்காமல் விவசாயிகள் விட்டனர்.
போதிய விலை இ்ல்லை
நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் அதிகளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. அடுத்து தக்காளி, தண்ணீர் அதிகமுள்ள இடங்களில் கொத்தமல்லி தழை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக போதிய விலை இல்லாததால் கொத்தமல்லி இலையை அறுவடை செய்யாமல் தோட்டங்களில் அப்படியே விட்டு விடுகின்றனர். நெகமம், சின்னநெகமம், உதவிபாளையம், என்.சந்திராபுரம், வீதம்பட்டி, வி.வேலூர், சாலைப்புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விலை நிலங்களில் விவசாயிகள் கொத்தமல்லி தழை சாகுபடி செய்து உள்ளனர். இங்கு விளையும் கொத்தமல்லி தழை பொள்ளாச்சி, உடுமலை, செஞ்சேரிமலை, பெதப்பம்பட்டி பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. தற்போது விலை குறைந்துள்ளதால் கொத்தமல்லி பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு உள்ளனர்.
பெரும் நஷ்டம்
இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது;- நெகமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 40 ஏக்கருக்கு மேல் கொத்தமல்லிதழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. விதை விதைத்து 45 நாட்களுக்கு பின்பு கொத்தமல்லி தழை அறுவடை செய்யப்படுகிறது. நெகமம் பகுதியில் கடந்த சில நாட்களாக விலை இல்லாததால் கொத்தமல்லி தழை அனைத்தையும் தோட்டத்திலேயே விட்டுள்ளனர். மார்க்கெட்டில் விலையும் கிடைப்பதில்லை. குறைந்த விலைக்கே விற்பனை ஆகி வருகிறது. தோட்டத்தில் வியாபாரிகள் தோட்டத்தில் வந்து மொத்தமாக 1 கிலோ ரூ.9-க்கு வாங்கி மார்க்கெட்டிற்கு கொண்டு போய் இடைத்தரகர்கள் கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்கின்றனர் ஆனால் எங்களிடம் குறைந்த விலைக்கு தான் வாங்குகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகாது குறைந்த விலைக்கு விற்பனை ஆவதால் ஆட்கள் கூலி, வண்டி வாடகை, கமிஷன் போன்றவற்றிக்குக்கூட விலை கிடைக்காததால் கொத்தமல்லி தழை பறிக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.