ஆய்வு
கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இனிப்பு, கார வகைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதிகளில் இயங்கி வரும் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் நிறுவனங்கள், மறுபொட்டலமிடும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வில் 4 நிறுவன தயாரிப்புகளில் அளவிற்கு அதிகமாக கலர் சேர்க்கப்பட்ட 40 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. அப்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், வேலுச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:-
சட்ட ரீதியான நடவடிக்கை
தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்க வேண்டும். மேலும் பணிபுரியும் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தும், மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும். பொருட்கள் தயாரிக்கப்படும் தண்ணீர் ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வறிக்கை பெற்று இருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்த கூடாது. பயன்படுத்திய எண்ணெய்யை பயோ டீசல் தயாரிப்பதற்கு அரசால் அங்கீகரிக்கட்ட நிறுவனங்களுக்கு விலைக்கு வழங்க வேண்டும். ஆய்வில் ஒரு முறை சமையலுக்கு பயன்படுத்தி 120 லிட்டர் எண்ணெய்யினை அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் உணவு பண்டங்களின் பொட்டலங்களில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.