‘மயிலந்தீபாவளி’ கொண்டாட தயாராகும் ‘வடசித்தூர்’

0
88

உலகில் வேற்றுமையிலும் ஒற்றுமையை காணும் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. எனினும் ‘யார் கண் பட்டதோ, இப்படி நடக்கிறது’ என்பது போல ஆங்காங்கே சிறு சிறு மோதல்கள் அத்திப்பூத்தாற்போல் வரத்தான் செய்கிறது. ஆனாலும் அவை கலவரங்களாக மாறிவிடாமல் தடுப்பது, உறவினர்கள் போல வாழ்ந்து வரும் நம் மக்களால்தான். எப்படி குடும்பத்துக்குள் சண்டை, சச்சரவுகள் வந்தாலும், நீண்ட காலம் நீடிப்பது இல்லையோ, அதுபோன்றுதான் இவையும். இங்கேயும் அப்படித்தான், வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் இந்து மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் இணைந்து ‘மயிலந்தீபாவளி’ என்ற பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதுபற்றி காண்போம்…!

‘மயிலந்தீபாவளி’

கோவை மாவட்டத்தில் நெகமம் அருகே வடசித்தூர், செல்லப்பகவுண்டன்புதூர், குரும்பபாளையம், சமத்துவபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இந்து மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இரு வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், உறவினர்களை போல நேசம் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

வழக்கமாக தீபாவளி பண்டிகையை ஆண்டுதோறும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து ஆனந்தமாக கொண்டாடுவார்கள். ஆனால் மேற்கண்ட கிராமங்களில் மற்றுமொரு நடைமுறை உள்ளது. அதாவது தீபாவளிக்கு அடுத்த தினத்தில் ‘மயிலந்தீபாவளி’ என்ற பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதனை இந்து மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டாடுவதுதான் தனிச்சிறப்பு. வேற்றுமையை மறந்து ஒற்றுமையை போற்றும் பண்டிகையாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

திருவிழா கோலம்

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ‘மயிலந்தீபாவளி’ கொண்டாடப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், இந்த ஆண்டு பண்டிகையை கொண்டாட தேவையான ஏற்பாடுகளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி வடசித்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகையையும், அதற்கு அடுத்த தினம் 25-ந் தேதி மயிலந்தீபாவளி பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் அதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வடசித்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பலகாரங்கள், விளையாட்டு உபகரணங்கள், அலங்கார பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் படைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ராட்டினங்களும் நிறுவப்படுகின்றன. இதனால் ஊரே திருவிழா கோலத்தில் காட்சியளிக்க உள்ளது. இதுகுறித்து அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூறிய கருத்துகளை பார்க்கலாம்..!

3 ஆண்டுகளுக்கு பிறகு…

பொன்மலை குமாரசாமி:-

எங்கள் பகுதியில் சாதி, மதங்களை கடந்த ‘மயிலந்தீபாவளி’ ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இது அனைத்து தரப்பினராலும் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். விழாக்கமிட்டி என எதுவும் இன்றி தானாக நடைபெற்று வருகிறது. வயது வித்தியாசம் இன்றி அனைவரும் இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். சுமார் 10 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடுவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கு.தேவராசு:-

வடசித்தூரில் 100 ஆண்டுகளுக்கு மேலாக ‘மயிலந்தீபாவளி’ கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த தினம் இந்த பண்டிகை கொண்டாடப்படும். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கொண்டாடப்படவில்லை. தற்போது மீண்டும் ‘மயிலந்தீபாவளி’ பண்டிகையை கொண்டாட ஆவலாக காத்திருக்கிறோம். அதற்கான முன்னேற்பாடு பணிகளை தாங்களே முன்வந்து ஆர்வத்துடன் முன்னெடுத்து செய்து வருகிறோம்.

ஒற்றுமை பலப்படுகிறது

யாஷ்மின் சிக்கந்தர்:-

எங்கள் ஊரில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த தினம் ‘மயிலந்தீபாவளி’ பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். சாதி, மதம் கடந்து நடைபெறுவதால் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் ஊரில் உள்ள முஸ்லிம், இந்து மதத்தை சேர்ந்த அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடுவது இந்த பண்டிகையைத்தான். அன்றைய தினம் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறி கொள்வோம். இதனால் எங்களுக்கு மனநிறைவு ஏற்படுகிறது.

நசீர்தீன்:-

‘மயிலந்தீபாவளி’ பண்டிகைையயொட்டி எங்கள் பகுதியில் இனிப்பு, கார பலகார வகைகள், வளையல்கள், கம்மல்கள் உள்ளிட்ட பேன்சி பொருட்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், அலங்கார பொருட்கள் ஆகியவற்றை விற்பனை பெய்யும் கடைகள் மற்றும் ராட்டினம் போன்றவற்றை ஒரு வாரத்திற்கு முன்பே அமைத்து விடுவார்கள். இதனால் பண்டிகை நெருங்கிவிட்டாலே பெரும் திருவிழா போன்று இருக்கும். மேலும் அருகில் இருக்கும் ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். இதனால் எங்களது ஒற்றுமை மேலும் பலப்படுகிறது.

பொன்.இளங்கோவன்:-

எந்த ஊரிலும் இல்லாத சிறப்பாக வடசித்தூரில் ‘மயிலந்தீபாவளி’ பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது எப்படி தோன்றியது என்பது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உலா வருகின்றன. இங்கு இந்து மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வசித்து வருகின்றனர். இரு மதத்தை சேர்ந்தவர்களும் ஊராட்சி தலைவர் உள்பட ஊரில் முக்கிய பதவிகளை அலங்கரித்துள்ளனர். ஆனால் எந்தவொரு மத கலவரமும் நிகழ்ந்தது இல்லை. இதற்கு காரணம், அவர்களது ஒற்றுமை. இதை வலியுறுத்தவே, ‘மயிலந்தீபாவளி’ பண்டிகையை கொண்டாட ஆரம்பித்திருக்க வேண்டும். ஏனென்றால் தற்போது வரை அந்த பண்டிகையை சாதி, மதம் பார்க்காமல் அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி கொண்டாடி வருகிறோம்.

திருமணமான பெண்களுக்கு கிடைக்கும் பாக்கியம்

வடசித்தூரில் அனைத்து தரப்பு மக்களும் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து ‘மயிலந்தீபாவளி’ பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இதில் மேலும் ஒரு சிறப்பு உள்ளது. அது என்னவென்றால், வடசித்தூரில் இருந்து திருமணமாகி வெளியூரில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்ற பெண்கள், அங்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு மறுநாள் ‘மயிலந்தீபாவளி’ பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள். அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது தோழிகளையும், உறவினர்களையும் ஒரே இடத்தில் காணும் ஆவலில் திளைப்பார்கள். மேலும் தாய் வீட்டில் விருந்து தயாராகி இருக்கும். மேலும் இது இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு மதங்களை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். எனவே மற்ற கிராமங்களில் இருந்து திருமணமாகி வெளியூருக்கு சென்ற பெண்களுக்கு கிடைக்காத பெரும் பாக்கியம், இந்த பண்டிகை என்றே கூறலாம்.