100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்க வேண்டும்

0
79

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம், தாத்தூர் பொதுமக்கள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் ஆனைமலை வி.ஆர்.டி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் சபுரா கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பள்ளியில் கடந்த ஆண்டு கட்டிய நூலக கட்டிடத்தில் மழைக்காலங்களில் மேற்கூரை வழியாக தண்ணீர் ஒழுகுகிறது. தரையில் கான்கீரிட் பெயர்ந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. புதிதாக கட்டும் கழிப்பிடத்தில் கழிவுகள் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டால், அதை சரி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே குழாயை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் 6 மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட மற்றொரு கழிப்பிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அங்கன்வாடி மையம்

ஆழியாறு நெல்லித்துறைமன்னத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் விவசாய கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். இங்குஅங்கன்வாடி மையத்துக்கு செல்லும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்ற கல்வி சூழல் இல்லை. மேலும் பொது கழிப்பிடம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே அந்த பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் பொது கழிப்பிடம் மற்றும் அங்கன்வாடி மையம் கட்டி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அரசு ஆஸ்பத்திரி

பொள்ளாச்சி நகர பா.ஜனதாவினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட அனைத்து ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் ஆகிறது. எனவே ஆஸ்பத்திரியில் உள்ள அனைத்து பிரிவுகளும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் தீர்வு காணவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

100 நாள் வேலை திட்டம்

தாத்தூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தாத்தூர் ஊராட்சியில் சுமார் 600 குடும்பங்களில் 500 குடும்பங்கள் 100 நாள் வேலை திட்டத்தை நம்பி வாழ்ந்து வருகிறோம். இந்த திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தினமும் 10 பேருக்கு கூட வேலை கிடைப்பதில்லை. இதை நம்பி தான் குழந்தைகளின் கல்வி செலவு, மருத்துவ செலவு, குடும்ப செலவு, மகளிர் சுயஉதவிக்குழு கடன் போன்ற தேவைகளை நிறைவேற்றி வந்தோம். தற்போது கால்வாய், குளம், குட்டைகள், நத்தம் புறம்போக்கு, தெருக்கள் புதர் மண்டி கிடக்கிறது. இந்த பணிகளை 100 நாள் வேலை திட்டத்தில் இணைத்து முறையாக பணி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.