தீபாவளி பண்டிகையையொட்டி கோவை கடை வீதிகளில் குவியும் பொதுமக்கள்

0
92

தீபாவளி பண்டிகை விற்பனை களைகட்டி வருவதால் கோவை கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். குற்றசம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இதற்காக புத்தாடைகள் வாங்குவதற்கும், புதிய பொருட்கள் வாங்குவதற்கும் கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, வெரைட்டிஹால் ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் புத்தாடைகள் வாங்க தங்களது குடும்பத்தினருடன் கடை வீதிகளில் குவிந்தனர். பொதுமக்கள் கூட்டம் காரணமாக ஒப்பணக்கார வீதி போக்குவரத்து நெரிசலில் திணறியது. இங்கு போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால் பொதுமக்கள் சிலர் தங்களது வாகனங்களை ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். குறிப்பாக ஒப்பணக்கார வீதியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை கூட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களின் பணம், நகை திருடும் சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் கூடுதல் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடம் ஜேப்படி செய்யும் நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தனிப்படை போலீசார் சீருடை அணியாமல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார், பொதுமக்கள் தங்களது நகை, பணம், பர்ஸ் உள்ளிட்டவற்றை பத்திரமாக வைக்கவும், சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டால் எச்சரிக்கையாக இருக்கும்படியும் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து வருகின்றனர்.

மேலும் கடைவீதிகளில் உள்ள கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோபுரங்களில் நின்று கொண்டு பொதுமக்கள் கூட்டத்தை கண்காணிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.