வால்பாறை நகராட்சி குடியிருப்பில் 4 வீடுகளுக்கு ‘சீல்’

0
88

நகராட்சி குடியிருப்பு

வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான குடியிருப்புகளில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக பணி புரிந்தவர்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தை சேராத 11 பேரை நகராட்சி குடியிருப்பில் இருந்து காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் காலி செய்யாமல் காலம் கடத்தி வந்தனர்.

இதையடுத்து வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் குடியிருப்பை காலி செய்து கொடுக்கவில்லை.

4 வீடுகளுக்கு சீல்

இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் நகராட்சி நகர்நல அலுவலர் அறிவுடைநம்பி தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ், வால்பாறை போலீசார் நகராட்சிக்கு சொந்தமான குடியிருப்புக்கு சென்றனர். இதையடுத்து வீடுகளை காலி செய்ய மறுத்த 4 பேரின் வீட்டிற்கு சீல் வைத்தனர்.

மற்றவர்கள் தங்களது வீடுகளை காலி செய்து கொடுக்க வருகிற நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.