இரவில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 12 குழுக்கள் அமைப்பு

0
145

காட்டு யானைகள் நடமாட்டம்

கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம் பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளை யம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கழுதைப்புலி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

மேலும் கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளுக்கு கோவை கோட்ட வனப்பகுதி வலசை பாதையாக உள்ளது.

இதனால் இடம்பெயர்ந்து செல்லும் யானைகள், மலை யடிவார பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

12 குழுக்கள் அமைப்பு

இதற்கிடையே, கோவை கோட்ட வனப்பகுதியில் காட்டு யானை களின் நடமாட்டத்தை கண்டறிந்து, துரத்துவதற்காக இரவு நேர கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை வனக்கோட்டத்தில் மருதமலை, தடாகம், போளுவாம் பட்டி அருகே தொம்பிலிபாளையம், நரசீபுரம், தோலம்பாளை யம், வெள்ளியங்காடு, சிறுமுகை அருகே அம்மன் நகர், வேடர் காலனி, மேட்டுப்பாளையம் அருகே ஓடாந்துறை, சமயபுரம் உள்பட 12 இடங்கள் காட்டு யானைகள் அதிகமாக வெளியே வரும் பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த பகுதியில் முகாம் அமைத்து இரவு நேரங்களில் காட்டு யானைகளை கண்காணிக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவில் வேட்டைத்தடுப்பு காவலர்கள், யானை பாதுகாப்பு படையினர், வனத்துறையினர் என தலா 6 முதல் 8 பேர் இருப்பார்கள். அவர்கள் தினமும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

அவர்கள், காட்டு யானைகளின் நடமாடுவதை கண்டறிந்தால் உடனே சென்று வனப்பகுதிக்குள் துரத்துவார்கள். இதற்காக அவர்களுக்கு ஒலி எழுப்பும் கருவி, அதிக வெளிச்சம் கொண்ட டார்ச் லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

இரவு நேரத்தில் மலையடிவார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டுவெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். காட்டு யானைகள் நடமாட்டம் இருந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.