நாட்டின் வளர்ச்சியில் இளைய தலைமுறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
பட்டமளிப்பு விழா
கோவையை அடுத்த எட்டிமடையில் உள்ள அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தில் 19-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அமிர்தா விஸ்வ வித்யா பீடம் டீன் சசங்கன் ராமநாதன் வரவேற்றார். விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ -மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:-
நாடு சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டு நிறைவடைந்ததை கொண் டாடும் தருணத்தில் ஆசாதி கா அமிர்த் மகோத்சவ் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை மேன்மைபடுத்துவதற்கு சரியான அறிவு, திறன்கள் மற்றும் இந்தியாவின் மதிப்புகளை எடுத்துரைக் கும் இளைஞர்களை எதிர்நோக்கி உள்ளோம்.
அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி தேவியின் ஆசியை பெரும் அரிய பாக் கியத்தை பெற்று உள்ளீர்கள்.
அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தில் பட்டம் பெறும் இளைஞர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத் தக்க பங்களிப்பை தர முடியும். நமது நாடு பல்வேறு வகைகளில் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக புதிய பாரதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
கவனம் செலுத்த வேண்டும்
பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு ஒருங்கிணைந்த வளர்ச்சி பல்வேறு துறைகளில் காணப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு மொழி, கலாசாரம், இடம் சார்ந்து பல்வேறு வேறுபாடுகள் இருந்து வந்தன. இதனால் வளர்ச்சி தடை பட்டது. தற்போது பிரதமரின் தலைமையில் இந்தியா ஒரே நாடு என உணரப்பட்டு வளர்ச்சி பாதையில் செல்கிறது. நாட்டின் வளர்ச்சியில் இளைய தலைமுறையினர் கவனம் செலுத்த வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் உலகமே திகைத்திருந்த நேரத்தில் நமது விஞ்ஞானிகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர். அதை இங்குள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கியதோடு மற்ற நாடுகளுக்கும் வழங்கினோம். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
1,808 பேருக்கு பட்டம்
இதில் 588 மாணவிகள், 1,220 மாணவர்கள் என மொத்தம் 1,808 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டன. 20 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழக அளவில் சிறந்து விளங்கிய 4 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டன.