நெல் அறுவடை பணி தீவிரம்-கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

0
70

ஆனைமலை பகுதிகளில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் அறுவடை

ஆனைமலை தாலுகாவை சுற்றியுள்ள உடையகுளம், வேட்டைக்காரன் புதூர், கோட்டூர், காளியாபுரம், காக்காகுத்திபாறை போன்ற பகுதிகளில் 540 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் பிரதானமாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனை பயன்படுத்தி ஆனைமலை தாலுகா விவசாயிகள் முதல் போகத்தில் நெல்லை பயிரிட்டனர். மேலும் ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்காடு பாசனத்திற்கும் பழைய ஆயக்காடு பாசனத்திற்கும் கடந்த மே மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல் கொள்முதல் மையம்

இதற்கு தமிழ்நாடு நுகர்வோர் சங்கம் சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நெல் கொள்முதல் மையம் கடந்த வாரத்தில் திறக்கப்பட்டது. இதில் அரசு நிர்ணயம் செய்த விலையான சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,560, கொதுரகம் குவிண்டாலுக்கு ரூ.2,115 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு உள் இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-ஆனைமலை தாலுகாவில் ஆண்டுக்கு 2 போகத்தில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இந்தநிலையில் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டை விட சன்னரகத்திற்கு 93 பைசாவும், பொது ரகத்திற்கு ஒரு ரூபாய் மட்டுமே விலை அதிகரித்துள்ளது. ஆனால் இடுபொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை,டீசல் விலை உயர்வு, வாகனங்களின் வாடகை விலை உயர்வு, விதை உரம் போன்ற வகைகளில் உற்பத்தி செலவு என நாளுக்கு நாள் பல மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது. எனவே கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.