ஆலோசனை கூட்டம்
வால்பாறை அருகே அட்டகட்டியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக வன மேலாண்மை பயிற்சி மையத்தில் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு துணை கள இயக்குனர் பார்கவா தேஜா தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, இயற்கை வன வள பாதுகாப்பு மைய ஆராய்ச்சியாளர்கள் சங்கர்ராமன், திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வனத்துறை அறிவிப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது, ரேஷன் கடைகளுக்கு பாதுகாப்பு, யானை வழித்தடங்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது, குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது, சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பழுதடைந்த குடியிருப்புகளை முறையாக பராமரிப்பது, இரவு நேரத்தில் எஸ்டேட் பகுதியில் சுற்றுலா பயணிகள் சுற்றுவதை கட்டுப்படுத்துவது, சிறு வனச்சோலை, இணைப்பு சோலைகளை பராமரிப்பது, இரவு பணிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வாகன வசதி செய்து கொடுப்பது என்று எஸ்டேட் நிர்வாகங்களை வனத்துறை கேட்டுக்கொண்டது.
நடமாடும் ரேஷன் கடைகள்
வால்பாறை நகரில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றும் பணி நடக்கிறது, தூய்மை பணியாளர்களை அதிகரிக்க அனுமதி கேட்டு கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது, அனுமதி கிடைத்ததும் ஒரு எஸ்டேட்டுக்கு 2 பேர் வீதம் நியமிக்கப்படுவார்கள் என்று நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ரேஷன் கடைகளை காட்டுயானைகள் உடைப்பதை தடுக்க வேண்டும் என்று எஸ்டேட் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர். அதற்கு, ரேஷன் கடைகளை பாதுகாப்பான இடத்தில் அமைக்கவும், முடிந்த வரை நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்கவும் கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் தேர்தல் துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், வனச்சரகர்கள் மணிகண்டன், புகழேந்தி, சுந்தரவடிவேல், யானைகள் ஆராய்ச்சியாளர் கணேஷ், எஸ்டேட் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வனமேலாண்மை பயிற்சி மைய உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.