கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

0
85

தூய்மை பணியாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

2-வது நாளாக வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கூலி உயர்வு, பணி நிரந்தரம், நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறித்தனர். இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தலைமையில் 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் காந்தி ஜெயந்தியான நேற்று முன்தினம் முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2-வது நாளாக நேற்று காலை 9 மணியளவில் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைகளில் மனுக்களுடன் குவிந்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சாலை மறியல்

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட வந்த தூய்மை பணியாளர்களை கலைந்து செல்லும்படி ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் மாதவன், உதவி கமிஷனர் வின்சென்ட் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

250 பேர் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட 150 பெண்கள் உள்பட 250-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து, ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை

இந்த நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு இடையே கலெக்டர் சமீரன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நேற்று காலை நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியடைந்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு ம.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவு கரம் நீட்டி வருகிறார்கள்.

கோவையில் 2 ஆயிரம் டன் குப்பைகள் தேக்கம்

2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவை மாநகரில் 2 ஆயிரம் டன் குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி ரூ.721 வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார்கள். நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது.

இதனால் கோவை மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

2 ஆயிரம் டன் குப்பைகள்

கோவை மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 1,200 டன் குப்பைகள் சேரும். அந்த வகையில் 2 நாட்களாக மாநகராட்சி பகுதியில் குப்பைகள் அள்ளப்படாததால் 2 ஆயிரம் டன் குப்பைகள் தேங்கியுள்ளன. மேலும் வீடுகள் தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் குப்பைகளை தொட்டிகள் மற்றும் சாலையோரத்தில் வீசிவிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

கோவை மாநகராட்சியில் பணிக்கு வந்த 40 சதவீதம் தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) நிரந்தர பணியாளர்கள் மற்றும் பணிக்கு வரும் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு நகரம் முழுவதும் தீவிர தூய்மை பணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.