ஆனைமலை அருகே அதிக பாரம் ஏற்றிச்சென்ற 15 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பாறை, ஜல்லி கற்கள்
கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகா பகுதியில் இருந்து கேரளாவுக்கு லாரிகளில் பாறை, ஜல்லி கற்கள், எம்.சாண்டு உள்ளிட்ட கனிமவள பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கனிம வளங்களை ஏற்றி செல்வதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரிடம் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கனிமவளங்களை ஏற்றி செல்லும் லாரிகள் பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்களுக்கு வழிவிடுவதில்லை என்றும், அதிவேகமாக செல்வதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது என்றும், இதனால் விபத்து அபாயம் உள்ளது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
லாரி சிறைப்பிடிப்பு
இந்த நிலையில் நேற்று ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம்பாளையம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு 15 லாரிகளில் ஜல்லி கற்கள், எம்.சாண்டு, பாறைகள் உள்ளிட்டவை ஏற்றி சென்றுள்ளனர். இந்த லாரிகளில் அதிகளவு பாரம் ஏற்றி செல்வதாக கூறி, 15 லாரிகளையும் செம்மணாம்பதி அருகே பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்ேபாது பொதுமக்கள் கூறுகையில், லாரிகள் அதிவேகமாக செல்வதால் கற்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் லாரிகளை சிறைப்பிடித்தோம். எனவே அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
அபராதம் விதிப்பு
இதையடுத்து போலீசார் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். மேலும் அதிவேகமாக லாரிகளை இயக்க கூடாது, வாகனங்களுக்கு இடைவெளி விட வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று லாரி டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
அதிகபாரம் ஏற்றி சென்றதாக லாரிகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆனைமலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.