மதகு சேதம்
பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 17.8 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கலாம். இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் திருமூர்த்தி அணை, ஆழியாறு அணைகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதில் திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கரும், ஆழியாறு புதிய ஆயக்கட்டில்44 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர மேற்கண்ட 2 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாக பரம்பிக்குளம் உள்ளது. மழைக்காலங்களில் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீரை வெளியேற்ற 3 மதகுககள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது பருவமழையால் அணை முழுகொள்ளளவை எட்டி உள்ள நிலையில் கடந்த 21-ந்தேதி நடுவில் உள்ள மதகில் இணைத்து கட்டப்பட்டு இருந்த சங்கிலி அறுந்து விழுந்தது. இதற்கிடையில் மேலே இருந்த சுவர் (பீம்) இடிந்து விழுந்ததில் மதகு உடைந்தது. நீரின் அழுத்தம் காரணமாக மதகு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இதற்கிடையில் சென்னையில் இருந்து வந்த அணை பாதுகாப்பு நிபுணர்கள் குழு பொறியாளர்கள் அணையை ஆய்வு செய்தனர். மேலும் புதிதாக மதகை பொறுத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்து மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து புதிதாக மதகு அமைப்பதற்கு அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதற்கிடையில் தொடர்ந்து அணையில் இருந்து 6-வது நாளாக சேதமடைந்த மதகு வழியாக தண்ணீர் வீணாக ஆற்றில் செல்கிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு
பரம்பிக்குளம் அணையில் கடந்த 1967-ம் ஆண்டு மதகு அமைக்கப்பட்டது. இந்த மதகின் அளவு 42-க்கு 27 அடியும், 30 டன் எடை கொண்டதாகும். ஒரு மதகு வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 20,750 கனஅடி நீர் வெளியேற்ற முடியும். மதகு அமைத்த பிறகு இதுவரை இதுபோன்ற பிரச்சினைகள் வந்ததில்லை. தற்போது புதிதாக மதகு அமைப்பதற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசாணை இன்னும் வரவில்லை. திருச்சியில் இருந்து புதிதாக மதகு தயாரித்து கொண்டு வரப்பட உள்ளது. 35 டன் எடையில், பழைய மதகை போன்று தயாரிக்கப்படும். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மதகு தற்போது வெளியே தெரிகிறது. மேலும் தற்போது அணையில் உள்ள மற்ற 2 மதகுகளையும் ஆய்வு செய்து, ஏதாவது பழுது ஏற்பட்டு இருந்தால் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54.20 அடியாக இருந்தது. அணையில் இருந்து சேதமடைந்த மதகு வழியாக வினாடிக்கு 4,513 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. நீர்வரத்து 860 கன அடியாக உள்ளது. மேலும் பரம்பிக்குளத்தில் இருந்து சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்திக்கு பின் வினாடிக்கு 966 கன அடி வீதம் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.