பி.ஏ.பி. வாய்க்காலில் புதர்களை அகற்ற வேண்டும்

0
92

பி.ஏ.பி. வாய்க்கால்

பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன (பி.ஏ.பி.) திட்டத்தில், பரம்பிக்குளம் அணை முக்கிய அணையாக உள்ளது. அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மின் உற்பத்தி செய்த பின்னர், காண்டூர் கால்வாய் வழியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஆழியாறு புதிய ஆயக்கட்டு திட்டத்தில் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பி.ஏ.பி. திட்டத்தில் அணையில் இருந்து ஆண்டுதோறும் திறக்கப்படும் தண்ணீர் நெகமம் அருகே கோவில்பாளையம் வாய்க்காலில் செல்கிறது.

புதர்கள் ஆக்கிரமிப்பு

அங்கிருந்து கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. இந்தநிலையில் கோவில்பாளையம் கிளை வாய்க்காலில் இருந்து கப்பளாங்கரை, வகுத்தம்பாளையம், தேவணாம்பாளையம், செட்டிபுதூர் செல்லும் கிளை வாய்க்காலில் வாழை மரம் வளர்ந்து உள்ளது. மேலும் கிளை வாய்க்கால் முழுவதும் புதர் செடிகள் வளர்ந்தும், படர்ந்தும் ஆக்கிரமித்து காணப்படுகிறது.

இதனால் அந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது கடை மடை வரை செல்வதில் தடை ஏற்படும். மேலும் பயிர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும். இதன் காரணமாக விவசாயிகள் மிகவும் பாதிப்பு அடைவார்கள். எனவே, அடுத்த முறை தண்ணீர் வருவதற்குள் கிளை வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் ஆக்கிரமித்து உள்ள வாழை மரங்கள், புதர்களை அகற்றுவதோடு, கடை மடை வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.