நந்தவனத்தில் பக்தர்கள் கூட்டம்

0
91

மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் மகாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பவானி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.

வைர கவசம்

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக அலங்கார பூஜைகள் அதிகாலை 4.45 மணிக்கு தீபாராதனை நடந்தது. அம்மன் வைர கிரீடம், வைர கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திரளானோர் வந்தனர். பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள முத்தமிழ் விநாயகர் சன்னதி, நாகர் சன்னதி, பீமன் பகாசுரன் சன்னதி, கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அமாவாசையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதோடு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் கூட்டம்

மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் நகராட்சி அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம் உள்ளது. இங்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். இதற்காக நந்தவனம் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு திறக்கப்பட்டது. பொதுமக்கள் குடும்பத்துடன் நந்தவனம் வந்து, பூஜை செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பவானி ஆற்றில் பிண்டம் கரைத்து தங்களது முன்னோர்களை வழிபட்டனர்.

அனைத்து இந்து சமுதாய சங்க தலைவர் பொன்னுசாமி தலைமையில், துணைத் தலைவர் காளியப்பன், செயலாளர் சுகுமாரன், பொருளாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் திதி கொடுக்க வந்த பொதுமக்களுக்கு வசதிகளை செய்து கொடுத்தனர். மேட்டுப்பாளையத்தில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.